யுத்தத்தின் போதும் சரி, அது நிறைவடைந்த பின்னரும் சரி கைதிகள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் சிறைக்குள்ளேயே தங்களது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர் சிறைக்குள் படும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். விசாரணைகள் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்ட சிலரையும் மோப்ப நாய்கள் போல தேடி அலைவது வேறு கதை.
கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் மட்டும் சுமார் 120 புலிச் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களே கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் தூர இடங்களிலிருந்து இவர்களைப் பார்க்கவரும் உறவினர்கள் படும்பாடு சொல்லில் அடங்காது.
பத்து அடிக்குட்பட்ட பார்வை அறைக்குள் அவர்கள் நெரிபட்டு நிற்க வேண்டும். கைதிகளைப் பார்வையிட வரும் உறவினர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள்.

அதிலும் பின்வரிசையில் உள்ளவர்கள் வரிசையின் முதலாவது இடத்திற்கு வருவதாயின் சிறை அதிகாரிகளுக்கு சம்திங் கொடுக்கவேண்டுமாம். இதனால், தமது உறவினர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே தம்மைப் பார்வையிட வருகின்றனர் என்றும் கைதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அண்மையில் சிறையிலிருக்கும் தன் உறவினரை பார்ப்பதற்காக சென்ற ஒரு அன்பர் அழாக்குறையாக எம்மிடம் தெரிவித்த கருத்து ‘நான் என்ட அண்ணாவ பார்க்க ‘கிவி’ பழம் வாங்கிக் கொண்டு போனனான்.
அப்படி ஒரு பழம் இருக்கெண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரியாதாம். அதைப் பிய்த்து பார்த்தனர். அந்தப் பழம் நைந்து தொய்ந்து போய்விட்டது. அதை எப்படி நான் சாப்பிடக் கொடுப்பன்?’ என்று ஆதங்கப்பட்டார். இவ்வாறான சம்பவங்கள் நிறையவே இடம்பெறுவதுண்டு.
அத்தோடு சிறைச்சாலை உணவுச்சாலையில் போதியளவு பொருட்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகின்றது. இது தொடர்பாக புதிய மகசீன் சிறைச்சாலை கைதி ஒருவர் தெரிவித்த கருத்து “வடக்கு கிழக்கில இருக்கிற தமிழ் அரசியல் கைதிகளின்ட உறவுகள் ஐ.சி.ஆர்.சி இன்ட காசை எடுத்து நகை நட்டுக்களை வித்துத்தான் சாமான்களை வாங்கி வாறாங்க.

ஆனால் அதிகாரிகளோ கொண்டு வந்த சாமான்களை திருப்பி அனுப்பி விடுறாங்க. கன்டீன்லதான் சாமான் எடுக்க வேண்டுமென்று சொல்றாங்க. அதே நேரத்தில கன்டீன்ல போய்ப்பாத்தால் அங்கரோ நூடில்ஸ் வகைகளோ இல்ல. சித்தாலேப கூட இல்ல.
ஒரு கிலோ பக்கட் எண்டு சொல்லி 700 கிராம் 750 கிராம்களில சீனிய விக்கினம். பால்மா பைக்கட்டில எல்லாம் கூப்பன் இல்லாம இருக்குது. 10 ரூபா 15 ரூபா என விலை கூட்டி விக்கிறாங்க.
வெளியில இருந்து தடைசெய்யப்பட்ட சாமான் வருகுது எண்டு சொல்லித்தான் கன்டீன்ல சாமான் எடுக்கணுமெண்டு சொல்லியிருக்குது. ஆனா எதிர்பாக்கிற சாமான் எதுவுமே கன்டீன்ல இல்ல.
தங்களுக்கு சார்பில்லாத ஆக்கள் வந்தால் 1000 ரூபா, 500 ரூபா என்டு காசு கேட்கிறாங்கள். லஞ்சம் தான் இங்க தலைவிரிச்சு ஆடிக்கொண்டிருக்கு.

நாங்கள் சட்டத்தை மதிக்கிறம். எங்களுக்கு பூட்சிற்றியோ, சதோசவோ ஒரு லக்சலவோ கோப்பிரட்டியோ போட்டால் எங்கட வீட்டுக்காரர் இங்கயே காசை கொண்டு வந்து எல்லா சாமானையும் வாங்கி தருவாங்கள் தானே.
எங்களுக்கு என்ன வேணுமெண்டால் ஒரு பொது நிறுவனமொன்று இந்த கன்டீன எடுத்து நடத்தணும்” என்று வேதனையுடன் தெரிவித்த அவர் இன்னுமொன்றையும் குறிப்பிட்டார்.
“இங்க இருக்கிற பிறிசின் காட்மார் வருகிற பொம்பிளையளோட வித்தியாசமான முறையில தரக்குறைவா கதைக்கிறது. அவங்கட போன் நம்பர் எல்லாத்தையும் மிரட்டி வாங்கிறது. அந்த போன் நம்பர எடுத்துவச்சு நீ விரும்புறியா கொள்றியா எண்டு அவயளுக்கு பிரச்சினையக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இப்ப இரண்டு நாளைக்கு முதல் சிங்களப் பொம்பிளைக்கு நம்பர் கொடுத்து பிரச்சினப்பட்டவங்க. இதைப் பற்றி கொமிசனருக்கு மனுக்கொடுத்தால் எடுக்கிறாருமில்ல.
இவர் வர்ற ஆக்களிட்ட கன்டீன்ல சாமான் வாங்கணுமெண்டு சொல்லியிருக்கார். பொலிஸிட்ட சொல்லியிருக்கார் கன்டீன்ல வாங்காத சாமான்களை திருப்பிவிடு எண்டு.
வாற ஆக்களோட கையப்பிடிச்சுக் கதைக்கிறது, தொட்டுக் கதைக்கிறது இப்படியான வேலைகளை பிறிசின் பொலிஸ் செய்து கொண்டு இருக்குது. இதுக்கு பிறிசின் நிர்வாகமும் ஒத்துழைச்சுக் கொண்டிருக்குது.
நாங்க கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கம். எங்களுக்கு எப்ப விடுதலையோ என்னவோ எண்டு தெரியவே மாட்டுது. இதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி அரசாங்கம் ஒரு கன்டீனை திறக்கிறத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறினார்.
இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாம் சிறைச்சாலை சிவில் நிர்வாக ஆணையாளர் அசோக் ஹப்புஆராச்சியை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது,

“சில நேரங்களில் கைதிகளைப் பார்வையிட வருபவர்கள் கிறீம் சோடா போத்தல்களில் ஜின் மற்றும் ஏனைய போதைவஸ்த்துக்களை கொண்டுவருவார்கள். எத்தனையோ தடவை நாம் இவற்றைக் கண்டுள்ளோம்.
சிலர் பாணினுள் ஒன்று அல்லது இரண்டு மொபைல் போன்களை வைத்து கொண்டுவருவார்கள். ஒருமுறை வாழைப்பழத்துக்குள் இருந்து சிம் கார்ட்டை கண்டுபிடித்தோம்.
இதனால்தான் நாங்கள் பழத்தை வெட்டிப்பார்க்க நேரிடுகின்றது. இவ்வாறான விடயங்களை தவிர்ப்பதற்காகத்தான் நாங்கள் கன்டீனில் பொருட்களை வாங்குமாறு வலியுறுத்துகின்றோம்.
அங்கு விற்பனை செய்யும் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்பட்டது. அதனை கூட்டி விற்கமுடியாது. எனினும் நான் இது தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துடன் ஆலோசித்து விற்கப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் விலைகள் பற்றிய சுற்று நிருபம் ஒன்றை அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அனுப்புகின்றேன்” என்று எம்மிடம் தெரிவித்தார்.
கைதிகளை பார்வையிட வரும் பெண்களிடம் சிறைச்சாலை அதிகாரிகள் தகாத முறையில் நடந்துகொள்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளது. இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

“இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு பொலிஸ் மற்றும் கடற்படையினரை நாங்கள் சிறைச்சாலை பரிசோதகர்களாக வைத்திருந்தோம். அந்த நேரங்களில் இவ்வாறான நிறைய குற்றச்சாட்டுக்கள் எமக்கு வந்தன.
ஆனால் தற்போது நாங்கள் தனியாக சிறை அதிகாரிகளை நியமித்துள்ளோம். தற்போது அவ்வாறு நடைபெறுவதில்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.
எனினும் நாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இது தொடர்பாகவும் ஆராய்ந்து பார்ப்பதாக எம்மிடம் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க கடந்த வாரம் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து வவுனியா நீதிமன்றத்திற்கு வழக்கு தவணைக்காக கொண்டுசெல்லப்பட்ட விசேட கைதிகளைப் பார்வையிடவந்த அவர்களின் உறவினர்களை அன்றைய தினம் கடமையில் இருந்த சிறைக்காவலர்களான லக்ஸ்மன், பொன்சேகா, அசங்க ஆகிய மூன்று சிறைக்காவலர்களும் ஆயுத முனையில் அச்சுறுத்தி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
கடும் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இரண்டு பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கும் கைதிகளை பார்வையிடுவதற்கு போதிய நேரம் வழங்கப்படாமை, உணவுப் பொருட்களை வழங்காமை மற்றும் கைதிகளை பார்வையிட வருகின்ற உறவினர்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகம் போன்ற விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
குறிப்பிட்ட சிறைக்காவலர்கள், சிறைச்சாலையிலும் கைதிகள் மீதும் பல சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியதில் நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி விடயங்கள் தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தாக்குதலுக்குள்ளான உறவினர் இராணுவத்தைச் சேர்ந்தவர். அவருக்கே இந்நிலைமை என்றால் அப்பாவி தமிழ் கைதிகளின் உறவினர்கள் படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் யார் அறிவார்? எனவே எந்தத் தீர்வும் கிடைக்காமல் சிறையில் வாடும் இக்கைதிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பதுடன் அவர்களைப் பார்க்கவரும் உறவுகளையும் கௌரவமாய் நடத்தவேண்டும்.

அப்பொழுதுதான் மக்களுக்கு பொலிஸ் சேவைமீதும் நீதி, நிர்வாக சேவை மீதும் தனி மரியாதையும் நன்மதிப்பும் ஏற்படும்.
சிறைச்சாலை சிவில் நிர்வாக ஆணையாளருடைய கருத்துக்கள் அரசியல்வாதிகளுடையதைப்போல் காற்றில் கரைந்துவிடுமா இல்லை ஆக்கபூர்வமான நடவடிக்கையாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-இருக்கிறம்-









0 comments:
Post a Comment