Premium WordPress Themes

Thursday, 5 May 2011

சூதாட்ட குற்றச்சாட்டை திலகரத்னே நிரூபிக்க வேண்டும்: முரளீதரன்

இலங்கை வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி வரும் திலகரத்னே அதை நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து குறைகூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இலங்கையின் சுழற்பந்து ஜாம்பவான் முரளீதரன் கூறியுள்ளார்.

கொச்சி அணிக்காக விளையாடி வரும் அவர் இதுகுறித்து மேலும் கூறியது:

திலகரத்னே ஏன் இவ்வாறு குற்றம்சாட்டி வருகிறார் என்பது எனக்கு தெரியாது. அவர் கூறுவதுபோல் யாராவது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அதுதொடர்பான ஆதாரங்களை அளிக்க வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவிடம் நான் தெரிவித்திருப்பேன். அதுதான் விதிமுறையை வகுத்துள்ளது. அனைத்து வீரர்களும் அதைத்தான் கடைப்பிடித்து வருகின்றனர் என்றார்.

திலகரத்னேவின் இந்த குற்றச்சாட்டால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புகழுக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டபோது, அதை மறுத்த முரளீதரன், திலகரத்னே கூறி வரும் குற்றச்சாட்டுக்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றார்.

திலகரத்னேவின் இந்தக் குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment