Premium WordPress Themes

Thursday, 5 May 2011

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா செயலாளரின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை!

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவின் செயலாளர் நாயகத்தினது செயற்பாடுகள் போதுமானதாக இல்லையெனில், அதற்கான காரணம்  அடுத்த தடவையும் ஐ.நாவின் செயலாளர் நாயகமாக இருப்பதற்கு அவர் போட்டியிடுவதுதான் என்று  Financial Times என்னும் பிரித்தானிய ஊடகத்தின் ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்த போரின் இறுதிநாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடந்த ஆண்டு நிபுணர் குழுவினை அமைத்திருந்தார். 

பொதுமக்களை இலக்குவைத்து பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக நம்பத்தகு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக நிபுணர்குழு அறிக்கையில் தற்போது குறிப்பிட்டிருக்கிறது. 

போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றவை எவையோ அவற்றினை விசாரிப்பதற்காக இலங்கை அரசாங்கம் தானே முன்னெடுக்கும் உள்ளக விசாரணைகள் திருப்திகரமாக இருக்கவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 


ஆனால் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தக் குற்றச்செயல்கள் தொடர்பாகப் பொருத்தமான நடவடிக்கையினை எடுப்பதற்குத் தன்னிடம் போதிய அதிகாரங்கள் இல்லை என்கிறார் பான் கீ மூன். 

இலங்கையின் ஒப்புதலோ அல்லது ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஒப்புதலோ இல்லாமல்  பான் கீ மூனால் விசாரணையினை முன்னெடுக்க முடியாது.  

கடுமையாகப் போராடி போர்க்குற்ற விசாரணையினை முன்னெடுப்பதை விடுத்து ஐ.நா. செயலாளர் நாயகம் அதிலிருந்து நழுவுவதற்கு விரும்புகிறார் போலும்.

நிபுணர்குழுவினால் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் அதிகமாக தொடர்புபட்டிருக்கும் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கம் ஐ.நா வல்லுநர்கள் குழுவின் இந்த அறிக்கையானது வெறும் கட்டுக்கதை என வாதிடுவதோடு இந்த அறிக்கைக்கு எதிரான மக்களெதிர்ப்பினைத் திரட்டும் வகையில் தொழிலாளர் தினப் பேரணியினைப் பயன்படுத்தியிருந்தது.  

இலங்கைக்கு சென்று விசாரணையினை நடாத்துவதற்குக்கூட இந்த அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. 

இதுபோன்றதொரு அனைத்துலக விசாரணையினை மேற்கொள்ளுவதானது இறையாண்மையுள்ளதொரு நாட்டினது உள் விடயத்தில் 'தலையிடும்' ஒரு செயல் என ஐ.நா பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தினைக் கொண்ட ரஸ்யாவும் சீனாவும் வாதிடுகின்றன.

இலங்கையைப் போன்ற கிளர்ச்சிசார் பிரச்சினைகளைக் கொண்ட நாடுகள் எவையோ அவை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை கருணையின்றி, தயவு தாட்சணியமின்றித்  துவம்சம் செய்வதற்குச் இலங்கை கைக்கொண்ட உத்திகள் மற்றும் வழிவகைகளை, கிளர்ச்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவது எவ்வாறு என்பதற்கான பாடமாகக் கருதுகின்றன. 

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தக் குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவின் செயலாளர் நாயகத்தினது செயற்பாடுகள் போதுமானதாக இல்லையெனில், அதற்கான காரணம்  அடுத்த தடவையும் ஐ.நாவின் செயலாளர் நாயகமாக இருப்பதற்கு அவர் போட்டியிடுவதுதான். 

இதுபோன்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என அழுத்தம் கொடுக்காதிருப்பது அடுத்த தடவை செயலாளர் நாயகமாகத் தொடர்வதற்கு ஏதுவாக அதிக வாக்குகளைப் பெறுவதற்கான வழியன்று. 

ஐ.நா. நிபுணர்குழுவின் கண்டறிதல்கள் தெளிவற்றதாக இருப்பினும், இத்தகைய குற்றச்சாட்டுக்களை அவ்வாறே விட்டுவிடமுடியாது. போரின் இறுதிநாட்களில் ஆகக்கூடுதலாக 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டமை, மருத்துவமனைகள் மீதான குண்டுத் தாக்குதல்கள் மற்றும் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்டவாகள் சுட்டுக்கொல்லப்பட்டமை போன்றவை உள்ளிட்ட சம்பவங்களை போர்க்குற்றங்களாகக் கருதமுடியும்  நிபுணர்குழு வகைப்படுத்தியிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தோற்கடிப்பது என்ற இலக்குத் தவறன்று. 

பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய விடுதலைப் புலிகள் ஆயுதம் தரிக்காத பொதுமக்களைக் கொலைசெய்வது தொடர்பில் தயக்கமெதுவும் காட்டியதில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பு புரிந்த குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். 

ஆனால், நாட்டினது தமிழ்ச் சமூகத்தினருடன் இன நல்ணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு மறுத்துவருவதன் ஊடாக தனக்குக் கிடைக்கப்பெற்ற அரிய வாய்ப்புகளை மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தவறவிட்டுவிட்டது. இடம்பெற்றதாக் கூறப்படும் குற்றங்களை வெளிப்படைத் தன்மையுடன் விசாரிப்பதும் இனநல்லிணக்கச் செயற்பாட்டின் ஒரு அங்கமே. 

மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என வாதிடும் மேற்கினது தாராள ஜனநாயக நாடுகளுக்கும் இறையாண்மையுள்ளதொரு நாட்டினது செயற்பாடுகளில் தலையிடக்கூடாது என வாதிடும் சீனா போன்ற வளர்ந்துவரும் சக்திகளுக்கும் இடையிலான பிணக்கினை வெளிப்படுத்துவதாக இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான இவற்றினது நிலைப்பாடுகள் அமைகின்றன. 

குறிப்பிட்ட இந்த விடயத்தினை பான் கீ மூன் இதனுடன் கைவிட்டுவிடுவாரெனில் அதனூடாகச் சொல்லப்படும் செய்தி தெளிவானதாக இருக்கும். 

'போருக்கான விதிமுறைகள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் என எவை தொடர்பிலும் கருத்திலெடுக்காது தங்களது உள்நாட்டினது பாதுகாப்பு எனக் கூறிக்கொண்டு தாம் நினைத்ததை நடத்திக்காட்டுவதற்கு பலமுள்ள அரசாங்கங்கள் கட்டுக்கடங்காத அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன. 

இவர்களது இந்த நடவடிக்கைகளின்போது  40 ஆயிரம் பேரென்ன 4 இலட்சம் பேர் கொல்லப்பட்டாலும் இவர்களுக்கு அதுவொரு பொருட்டல்ல.' இது தரும் மோசமான செய்தி இதுதான் என்று பிரித்தானிய ஊடகத்தின் ஆசிரியதலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment