Premium WordPress Themes

Saturday, 16 April 2011

நிபுணர்குழுவின் அறிக்கை இரகசியமாக வெளியானதால் ஐ.நா விசனம்!

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியானதைத் தொடர்ந்து ஐ.நா விசனம் தெரிவித்துள்ளது. 

ஐ.நா சபையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட முன்னர் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட பிரதியினால் ஊடகங்கள் வாயிலாக கசிய விடப்பட்டுள்ளதாக ஐ.நா விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

ஐ.நா நிபுணர் குழு வழங்கிய அறிக்கையை ஐ.நா பொதுச்செயலாளர் ஆராய்ந்து வருகிறார். இந்த அறிக்கைக்குப் பதிலளிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில் இலங்கை ஜனாதிபதிக்கும் அறிக்கையின் பிரதியொன்று வழங்கப்பட்டுள்ளது. 

நிபுணர் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பதிலும் வெளியிடப்படும். 

ஆனால் இதற்கு முன்னர் இந்த அறிக்கையின் சில பகுதிகள் இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றின் வாயிலாக வெளிவந்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நிபுணர் குழுவின் அறிக்கை அடுத்த வாரமளவில் வெளியிடப்படும் என ஐ.நா பொதுச்செயலாளரின் பணியகம் அறிவித்துள்ளது.

மஹிந்தருக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் பொன்சேகா! (ஆவணம் இணைப்பு)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான போர் தயார்ப்படுத்தல்களில் கொழும்பு வெலிக்கடைச் சிறையில் இருக்கும் பொன்சேகா ஈடுபட்டு வருகின்றாரா? என்று அரசியல் அவதானிகளிடையே அண்மை நாட்களில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

பொன்சேகாவுக்கு சைப்பிரஸ் நாட்டிலிருந்து ஜோர்டான் விமானத்தில் இராணுவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. 

இவற்றை பொன்சேகா கொள்வனவு செய்திருக்கின்றார். சைப்பிரஸ் நாட்டில் உள்ள ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றே இந்த நவீன ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளது. 

இந்த ஆயுதப் பார்சல் தற்போது மர்மமான முறையில் காணாமல் போய் விட்டது என்று அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.





மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான இரகசிய நடவடிக்கைக்கு பொன்சேகாவுக்கு ஆயுதம் விற்க சம்மதித்த ரஷ்ய ஆயுத விற்பனை நிறுவனம் தொடர்பான கடித ஆதாரமொன்றும் தற்போது சிக்கியுள்ளது. 

Friday, 15 April 2011

ரகசியமாக கசிந்துள்ள ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நிபுணர் குழுவின் அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத நிலையில் இந்த அறிக்கை இலங்கையில் உள்ள ஊடகம் ஒன்றின் வாயிலாக கசிந்துள்ளது. 

இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. 

இந்த அறிக்கையில், அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் முயற்சிகளை நிராகரித்துள்ளது. 

தமிழீழ விடுதலைப்புலிகளும் அரச தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அரசு நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை பணயக் கைதிகள் போன்று தடுத்து வைத்திருந்ததாகவும் தப்பிச் செல்ல முயன்றவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. 

அரசாங்கம் மனிதாபிமானப் போரை நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறினாலும் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்களை மீறும் பாரதூரமான நடவடிக்கைகளில் அரசும், விடுதலைப் புலிகளும் ஈடுபட்டுள்ளனர். 

இந்த மீறல்களில் சில போர்க்குற்றங்களாகவும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் கருதப்படத்தக்கவை. 

போரின் இறுதிக்கட்டத்தில் 2008 செப்டெம்பர் தொடக்கம் 2009 மே 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் படையினர் வன்னியில் முன்னேறிச் சென்ற போது மேற்கொண்ட பரவலான எறிகணைத் தாக்குதல்களில் ஏராளமாக பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

வெள்ளை வானில் ஆட்கள் கடத்தப்பபட்டதுடன் காணாமற்போன போன சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வன்னியில் மூன்று தாக்குதல் தவிர்ப்பு வலயங்களின் மீது அரசாங்கம் கனரக ஆயுதங்களின் மூலம் கடுமையான பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பெரும்பாலான இழப்புகளுக்கு அரசின் பீரங்கித் தாக்குதல்களே காரணம். மருத்துவமனைகளின் மீதும் அரசு பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

வன்னியில் இருந்த அனைத்து மருத்துவமனைகளும் மோட்டார் மற்றும் ஆட்டிலறி போன்ற பீரங்கிகளால் தாக்கப்பட்டுள்ளன. பல மருத்துவமனைகள் திரும்பத் திரும்பத் தாக்கப்பட்டுள்ளன. 

2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலத்தில் பத்தாயிரம் உயிர்கள் பலியாகின. இதில் போரின் இறுதி நாட்களில் அடையாளம் காணப்படாமல் பெருமளவானோர் இறந்தனர். 

போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் போராளிகள் தனியாக பிடித்துச் செல்லப்படனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட்டிருக்கக் கூடும். ஏனையோர் காணாமற் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மூடப்பட்ட முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களின் அடிப்படை சமூக பொருளாதார உரிமைகள் மீறப்பட்டன. அநாவசியமாக பலர் உயிரிழக்க நேரிட்டது. பலர் சித்திரவதை செய்யப்பட்டனர். 

விடுதலைப்புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்கு வசதிகள் மறுக்கப்பட்டன. அவர்கள் வெளியுலகுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தடுக்கப்பட்டனர். முன்னேறி வந்த அரச படையினரைத் தடுக்க பொதுமக்களை புலிகள் மனித கவசங்களாகப் பயன்படுத்தினர். 

கட்டாய ஆட்சேர்ப்பை நடைமுறைபடுத்தினர். இளவயது சிறார்களையும் படையில் சேர்த்தனர். 2009 பெப்ரவரியில் தமது பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

அதிகளவு பொதுமக்கள் தங்கியிருந்த அவர்களுக்கான விநியோகப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் இருந்து பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டனர். போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியே தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். 

ஐ.நா நிபுணர் குழு இலங்கை அரசு மீது ஐந்து விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. 

1. பரந்தளவிலான பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களைப் படுகொலை செய்தமை. 

2. மனிதாபிமான இலக்குகள், மருத்துவமனைகள் மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது. 

3. பொதுமக்களுக்கு மனிதமாபிமான உதவிகள் கிடைப்பதை தடுத்தமை. 

4. போரில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிச் சந்தேகநபர்களின் மனிதஉரிமைகளை மீறியது. 

5. ஊடகங்கள் மற்றும் அரசை விமர்சிப்பவர்கள் மீதும், போர் நடைபெற்ற பகுதிகளுக்கு வெளியே மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டது. 

இதேவேளை விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆறு குற்றச்சாட்டுகளையும் நிபுணர்கள் குழு முன்வைக்கிறது. 

1. பொதுமக்களை மனிதகவசங்களாக பயன்படுத்தியது. 

2. தமது பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற பொதுமக்களைக் கொன்றது. 

3. பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து படைக்கருவிகளை இயக்கியது. 

4. சிறுவர்களைக் கட்டாயமாக படைகளில் சேர்த்தது. 

5. பொதுமக்களிடம் கட்டாயமாக வேலைவாங்கியது. 

6. போர் நடைபெறாத பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களைக் கொன்றது. 


இலங்கையில் அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதற்கு பொறுப்புக் கூறுவது உள்நாட்டு அனைத்துலக சட்டங்களின் படியான கடமையாகும். 

இந்த வலுவான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமான விசாரணை நடத்தி அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இராணுவத் தளபதிகள், மூத்த அரச அதிகாரிகள், குறிபாக இராணுவ, குடியியல், மற்றும் புலிகளின் தலைவர்கள் மீது அனைத்துலக குற்றங்களில் ஈடுபட்டதற்காக முன்னிறுத்தப்பட வேண்டும். அரசு நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு அனைத்துலக தரத்துக்கு அமைவானதல்ல. 

அதில் ஆழமான குறைபாடுகள் உள்ளன. போரின் இறுதிநாட்களில் ஐ.நாவின் அரசியல் அங்கங்களோ அல்லது அமைப்புகளோ வன்னியில் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியுள்ளன.

பரிந்துரை -1 
அ. ஆயுதப்போரின் போது இருதரப்பினாலும் மீறப்பட்ட அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான நீதியான விசாரணைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். 

ஆ. இலங்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலhளர் உடனடியாக சுதந்திரமான அனைத்துலக பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


பரிந்துரை - 2 

கீழ் குறிப்பிடும் விடயங்கள் குறித்து இலங்கை அரசு குறுகிய காலநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 


பரிந்துரை - 3
 

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் வகையிலான நீண்டகால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 


பரிந்துரை - 4 

இலங்கை தொடர்பாக 2009 இல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அழைப்பது குறித்து ஐ.நா மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தோனேசிய முன்னாள் சட்டமா அதிபர் மர்சூகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழுவின் அறிக்கை 196 பக்கங்களை உள்ளடக்கியதாகும்.

இராணுவச் சிப்பாயொருவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 16 வயது யுவதி


விறகு தேடிக் காட்டுக்குச் சென்ற வேளையில் இராணுவச் சிப்பாயொருவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 16 வயது யுவதியொருத்தி மூன்றுமாத கர்ப்பிணியாக இருக்கும் நிகழ்வு வாகரையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் வாகரைப் பிரதேசத்தின் பதினாறு வயது யுவதியொருத்தி விறகு தேடிக்காட்டுக்குச் சென்ற வேளை இராணுவச் சிப்பாயொருவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
ஆயினும் சம்பவம் பற்றி வெளியில் சொன்னால் இராணுவத்தினர் தன்னைக் கொன்று விடுவர் என்ற பயம் காரணமாக அவர் விடயத்தை மறைத்து வைக்க முயன்றுள்ளார்.  ஆயினும் இன்று அவரது கர்ப்பம் குறித்து வெளியில் தெரிய வந்த பின்பே அவர் விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தன்னை வல்லுறவுக்குட்படுத்திய சிப்பாயை மீண்டும் ஒரு தடவை கண்டால் தன்னால் தெளிவாக அடையாளம் காட்ட முடியும் என்றும் அவர் பொலிசாருக்கு அளித்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பிரஸ்தாப இராணுவச்சிப்பாயை கைது செய்வதற்கு நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளை வாகரைப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

காணாமல் போன மகனை பேஸ்புக் மூலம் தேடும் பாசக்காரத் தந்தை!


கடந்த எட்டு தினங்களாகக் காணாமல் போயுள்ள தனது ஐந்து வயது மகனை பேஸ்புக் மூலமாகத் தேடி வருகின்றார் மும்பையைச் சேர்ந்த ஒரு தந்தை. 

பொலிஸார் இந்தச் சிறுவனைக் கண்டுபிடிக்க இதுவரை எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையிலேயே தந்தை இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளார். 

பேஸ்புக் வழியாக யாராவது தனது மகன் பற்றியத் தகவலை தனக்கு வழங்க முடியும் என்று 37 வயதான ஆனந்த் ஷா என்ற இந்தத் தந்தை நம்புகின்றார். கார்னிட் என்ற ஐந்து வயதுச் சிறுவனே காணாமல் போயுள்ளான். 
http://www.facebook.com/pages/Missing-Boy-Karnit-Shah/203454529685688


ஏப்பிரல் மாதம் ஒன்பதாம் திகதி சிறுவன் பற்றிய விவரம் படம் என்பன பேஸ்புக்கில் தரப்பட்டுள்ளன. சிறுவனின் தந்தை மும்பாய் பங்குச் சந்தையில் பணிபுரிபவர். 

பொலிஸார் தனது மகனைக் கண்டுபிடித்துத் தரும் வரையில் தன்னால் பொறுத்திருக்க முடியாது என்றும் அதனாலேயே தன்னால் முடிந்த வரையில் தனது மகனைத் தேடும் பணியைத் தானும் தொடங்கியுள்ளதாக அவர் கூறுகின்றார். 



ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி மாலை தனது வீட்டுக்கு அருகில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. 

நீண்ட நேரம் தேடிப்பார்த்தப் பிறகு அன்றைய தினம் இரவு 9.30 அளவில் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு 450 முன்னாள் புலி உறுப்பினர்கள் குடும்பத்தாருடன்.

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள ஏற்கனவே திருமணமான 450 முன்னாள் புலி உறுப்பினர்கள் குடும்பத்தாருடன் இணைக்கப்படவுள்ளனர். 

இது தொடர்பான அறிவித்தலை புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

வவுனிய கலாசார நிலையத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் ஏற்கனவே திருமணமான 450 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களே குடும்பத்தாருடன் இணைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை புதுவருடத்தை முன்னிட்டு புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Thursday, 14 April 2011

கோடையிலும் ஜில்..ஜில்..கூல்..கூல்..

கோடை காலத்தில் சருமம் பாதிக்கப்படுவது இயற்கையே. தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமுறை பேஸ்பேக் போடுவது நல்லது. வெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து சிறிது பால் ஏடு சேர்த்து தடவிக் கொள்ளலாம். 

உருளைக் கிழங்கை எடுத்து மிக்சியில் அறைத்து பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டு கழுவலாம். உருளைக்கிழங்கு ப்ளீச்சிங் ஏஜெண்டாகவும் செயல்படுகிறது. 

வெயில் பட்டு முகம் கறுத்துப் போய் விட்டதாக உணர்பவர்கள் இந்த உருளைக்கிழங்கு பேக்கை முகத்தில் போட நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த சீசனில் பழங்கள் எளிதாகக் கிடைக்கும். 

கோடையின் கடுமையைப் போக்குவதில் முதலிடம் வகிப்பவை வாழைப்பழம் மற்றும் தர்பூசணி பழங்கள். இவற்றைக் கொண்டு பேஸ்பேக்குகள் தயாரிக்கலாம்.

வாழைப்பழத்தை மசித்து அரை ஸ்பூன் பால் சேர்த்து சில துளிகள் தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டப்பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். தர்பூசணி பழத்தைக் கொண்டும் பேஸ் பேக் தயாரிக்கலாம். 

தர்பூசணி பழத்துடன் பால் சிறிதுதேன் சேர்த்து முகத்தில் தடவிக் கொண்டு 20 நிமிடங்கள் உலரவிட்டு முகத்தைக் கழுவலாம். இந்த தர்பூசணி மற்றும் வாழைப்பழ பேக்குகளை வீட்டிலேயே தயாரிப்பது எளிது. 

அவ்வப்போது பிரஷ்ஷாகத் தயாரித்து பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும். இந்த வகை பேஸ்பேக்குகள் ஓரளவு கோடையின் கடுமையைப் போக்கக் கூடியவை.

நாள் முழுவதும் வெயிலில் நின்று கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு முகம் கன்றிக் கறுத்து விடுவது இயற்கை. இவர்கள் பன்னீரை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றிக்கொள்வதன் மூலம் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளலாம். 

கோடை வெயிலில் போய் விட்டு வந்த பின் கண்கள் உஷ்ணத்தால் எரிகிறதல்லவா? வெள்ளரிக்காயை சிலைஸாக வெட்டி இமைகளின் மீது வைத்து ஒற்றி எடுக்க கண் எரிச்சல் நீங்கும். 

இளநீரை முகத்தின் மீது ஸ்ப்ரே செய்து கொள்வதன் மூலமாகவும் முகசருமம் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

இம்முறையும் சித்திரைப் புத்தாண்டு இல்லை!- வன்னி மக்கள்


இலங்கையில் மீள்குடியேற்றப் பகுதிகளாகிய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இம்முறையும் சித்திரைப் புத்தாண்டு சோபிக்கவில்லையென அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். 
தமிழ் சிங்களப் புதுவருடமாகிய சித்திரைத் திருநாள் தென்னிலங்கையிலும் வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் களைகட்டியிருந்த போதிலும், மீள்குடியேற்றப் பகுதிகளில் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை.
மீள்குடியேற்ற பகுதிகளில் இன்னும் இயல்பு நிலைமை நிலைமை ஏற்படாதிருப்பதனையே இது காட்டுவதாக அங்குள்ள மக்களின் கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
உறவுகள், உடைமைகள் அனைத்தையும் இழந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்திருந்து பின்னர் சொந்த இடங்களுக்கு வெறும் கைகளுடன் திரும்பியுள்ள மக்கள் தமது வாழ்க்கையை இன்னும் வழமைக்கு கொண்டுவர முடியாமல் திண்டாடுவதாக பலரும் கூறுகின்றனர்.
மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகின்றது. ஆயினும் மீள்குடியேற்றப் பகுதிகளில் பல்வேறு அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருப்பதாக மீள்குடியேறியிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆயினும் மீள்குடியேற்றப்படுபவர்களுக்கான உட்கட்டமைப்புக்கள், பொது வசதிகள் என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
அத்துடன் குறித்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களை மீளக்குடியமர்த்தும் பணி பூர்த்தியடைந்து விட்டதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்து வருகின்ற போதிலும் மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னமும் நிறைவு செய்யப்படவில்லை என்பது மக்களின் அங்கலாய்ப்பிலிருந்து புலனாகின்றது என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட இடைவெளியின் பின்னர் சாந்தன் சுகுமார் ஒரே மேடையில்

நீண்ட இடைவெளியின் பின்னர் ஈழத்தின் முன்னணிப் பாடகர்களான சாந்தன் சுகுமார் ஆகிய இருவரும் ஒரே மேடையில் மக்கள் முன் தோன்றினர். 

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நேற்றைய தினம் யாழ்பாணம் நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற இன்னிசை நிகழ்விலேயே இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.

சப்தஸ்வரா இசைக்குழுவின் இசையில் ஸ்ரீகுகன் இசைவழங்க ஈழத்தின் முன்னணி பாடகர்களான சாந்தன், சுகுமார் இருவரும் நேற்றைய மேடையில் பக்தி பாடல்களும் தத்துவ பாடல்களும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

நீண்ட இடைவெளியின் பின் இருவரும் ஒரே மேடையில் நிகழ்சியினை நடத்திக் கொண்டு இருப்பதை அறிந்த ரசிகர்கள் பெருமளவில் கூடினர்.

பாடகி சித்திராவின் ஒரே மகள் நந்தனா நீரில் மூழ்கி மரணம்!


இந்திய பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா (வயது 8) இன்று காலை நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தாள்.
பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இவருக்கும் ‌விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8 வயதாகிறது. இந்நிலையில் துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா.
சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை பாட இருக்கின்றனர்.
துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள பிரபல இந்திய தொழிலதிபர் திலீப் ரவுலான் என்பவர் வீட்டில் சித்ரா தனது குழந்தையுடன் தங்கியிருந்தார். சித்ராவின் மகள் நந்தனா வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக குழந்தை நந்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15 வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண்முன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார் சித்ரா.

சின்னக்குயில் சித்ராவின் கணீர்க் குரலில் ஆராரோ ஆராரோ பாடல்.......


Wednesday, 13 April 2011

மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்களுக்கு நுரையீரல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்கள் வெளிப்படையாக ஒருபோதும் அதை ஒப்புக்கொள்வதில்லை. 

ஆனால் மதுவுக்கு ஆண்களை விட பெண்களே விரைவில் அடிமையாகின்றனர். 

இதனால் தான் பிரிட்டிஷ் அரசு சகல வயதினருக்குமான பாதுகாப்பான குடி வரையறையை பெண்களுக்கு வாராந்தம் 14 அலகுகளாகவும், ஆண்களுக்கு 21 அலகுகளாகவும் வகுத்துள்ளது. 

இளம் பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அதனால் அவர்கள் மத்தியில் நுரையீரல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாகவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 

ஆண்களைவிட விரைவில் பெண்கள் மதுவுக்கு அடிமையாவது போலவே மது சம்பந்தமான நோய்களுக்கும் பெண்களே அதிகம் ஆளாகின்றனர். 



நுரையீரலில் மது ஏற்படுத்தும் பாதிப்பு இரு பாலாருக்கும் ஒரே விதத்திலேயே அமைந்துள்ளது. பெண்கள் மதுவுக்கு விரைவில் அடிமையாக முக்கிய காரணம் அவர்களது உடம்பில் நீர்த்தன்மை குறைவாக இருப்பதாகும். 

ஆண்களது உடம்பில் 65 வீதம் நீர்த்தன்மை காணப்படுகின்றது. பெண்களுக்கு இது 55 வீதமாகவே உள்ளது. லண்டன் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் டொக்டர்.மார்ஷா மோர்கன் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

புது வருடத்தை முன்னிட்டு யாழ்.முனீஸ்வரன் வீதியில் களைகட்டிய வியாபாரம்(காணொளி, பட இணைப்பு)

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்.முனீஸ்வரன் வீதியில் வியாபார நடவடிக்கைகள் இன்று மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்றன. 

குறிப்பாக தென்னிலங்கையிலிருந்து வந்த  வியாபாரிகள் நடைபாதை வியாபார நடவடிக்கைகளில்  அதிகமாக ஈடுபட்டனர்.

மாலை வேளைகளில் வீரசிங்கம் மண்டபத்தையண்டிய பகுதிகளிலும் முனிஸ்வரன் வீதியை அண்டிய வியாபார பகுதிகளிலும் பொருட்களை கொள்வனவு செய்யும்  மக்கள் கூட்டம்  அதிகமாக காணப்பட்டனர்.

 

 













ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனை....

தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல தெரிக்கும் தலைவலியை நம்மில் அநேகம் பேர் உணர்ந்திருக்க முடியும். தலைவலியில் பல விதங்கள் உண்டு. சாதாரண தலைவலி சில நிமிட நேரமே நீடிக்கும். 

ஆனால் ஒற்றைத் தலைவலி எனப்படும் மைக்ரேன் தலைவலி பிரச்சினைக்குரிய ஒரு நோயாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒற்றை தலைவலிக்கு காரணங்கள் பல உள்ளன.

மூளையில் கொப்பளம், நாடாப்புழு மூளையைத்தாக்குதல், சைனஸ், பற்களில் பாதிப்பு போன்றவை இந்தவகை தலைவலி வருவதற்கு காரணமாக கருதப்படுகிறது. ஆனால் முறையற்ற வாழ்க்கை முறையே இந்த மைக்ரோன் ஒற்றைத்தலைவலி வர காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். 

யாருக்கு பாதிப்பு அதிகம் மைக்ரேன் தலைவலி குறிப்பிட்ட தரப்பினரை அதிகமாக தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 20 வயதில் இருந்து 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண்கள்தான் இந்த பிரச்சினைக்கு அதிகம் ஆளாகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நோய்க்கான மருந்து

ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்துகள் உள்ளன. மனதை ஒருமுகப்படுத்துதல், தியானம், யோகாசனம், ஆகிய பயிற்சிகள் மைக்ரேன் தலைவலியை கட்டுக்குள் வைக்கும். 

இவற்றைக் காட்டிலும், முறையான ஓய்வு, நேரத்திற்கு கட்டுப்பாடான உணவு, உடற்பயிற்சி போன்றவை ஒற்றைத்தலைவலியை அண்டவிடாமல் செய்துவிடும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாகும்.

பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றிகள்! உணர்ச்சிவசப்படும் யாழ். பல்கலை விரிவுரையாளர் நவரத்தினம் (காணொளி, பட இணைப்பு)

பயங்கரவாதத்தை தோற்கடித்த ஜனாதிபதிக்கு நன்றி என்றும் அதனால் தான் இன்று நாங்கள் நிம்மதியாக சுதந்திரம் பெற்று வாழ்கிறோம் என்றும் ஜனாதிபதியை சந்தித்து தனது நன்றியறிதலைத் தெரிவித்துள்ளார் யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் கலாநிதி நவரத்தினம். 

சுற்றுலா சென்ற மாணவர்களை மிகவும் திட்டமிட்ட வகையில் தனது அரசியலுக்காக இவர் பயன்படுத்தியிருப்பதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே தனது இரண்டு பிள்ளைகளை விரிவுரையாளராக்கிய நவரத்தினம் ஏனைய இரண்டு பிள்ளைகளையும் விரிவுரையாளராக்கி பதவியையும் சுகங்களையும் அனுபவிப்தற்காகவே இந்த நாடகத்தை நடத்தியுள்ளார் என்று பல்கலைக்கழக தரப்பினர் கூறுகின்றனர். 
 
மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை தொடுப்பதிலும் காம விளையாட்டுக்களில் ஜாம்பவானான கலாநிதி நவரத்தினம் மாணவர்களின் கடும் எதிர்ப்புக்குள்ளான ஒருவர். சுவரொட்டிகள் வாயிலாக எச்சரிக்கப்பட்டவர். 

கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களை ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தை நன்கு திட்டமிட்டு அவர் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. 

புலிகளை அழித்தமைக்காக மஹிந்தருக்கு பொன்னாடை போர்த்திய அவர் நுண்கலைப்பீடம் சார்பானதாக குறிப்பிட்டுச் சரஸ்வதி சிலையை நினைவுப் பரிசாக கையளித்தார். 



ஜனாதிபதியின் முன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர் பேசும் காட்சிகள் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன. 

வடக்கு கிழக்கில் சுகந்திரம் பிறந்து விட்டது என்றும் அதை ஜனாதிபதியே உருவாக்கியவர் என்றும் அதை சிங்களத்தில் உதவி விரிவுரையாளர் ஒருவரைக் கொண்டு வாசிக்க வைத்து மஹிந்தரை அப்படியே பூரிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளார். 



ஜனாதிபதியை புகழ்ந்து பாடல்களை பாடிய புலவனும் பாணரும் என்று இவரை மாணவர்கள் ஏற்கனவே கிண்டல் செய்த நிலையில் அடுத்தபடியாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

இவரது நடவடிக்கை யாழ் பல்கலைக்கழக வரலாற்றில் கறை படிந்த நடவடிக்கை என்றும் தனது தனிப்பட்ட நலனுக்காக மாணவர்களை பலியாக்கியுள்ளார் என்றும் பல்கலைக்கழக சமூகம் விசனம் தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி உட்பட அரச அரசியல்வாதிகளை சந்திப்பதை தவிர்த்து ஒதுங்கி கல்வி கற்கும் நிலையில் மாணவர்களை பலவந்தமாக இவர் சந்திக்க வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கு முன்னால் அவரை மகிழ்ச்சிப்படுத்த மாணவர்களை இவர் பாடல் பாடவும் வைத்துள்ளார். 

புதிய துணைவேந்தரின் தெரிவுக்குப் பிறகு நடந்த இந்தச் சம்பவம் அவருடைய ஏற்பாட்டிலா நடந்தது என்று யாழ் பல்கலைக்கழக சமூகம் சந்தேகம் எழுப்பியுள்ளது? 

போர்க்குற்றங்களால் சர்வதேச ரீதியாக பல்வேறு அழுத்தங்களை சந்தித்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நடத்திய போர் பயங்கரவாதத்திற்கு எதிரானது என்றும் தமிழ் மக்களும் மாணவர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்து ஜனாதிபதியை அங்கீகரிக்கின்றனர் என்றும் காட்டிக் கொள்ளவே இந்த சந்திப்பை அரசியல் உயர்மட்டங்களுடன் இணைந்து நன்கு திட்டமிட்டு விரிவுரையாளர் நவரத்தினம் நடத்தியுள்ளார் என்று கொழும்பு தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தில் உள்ள இசைத்துறையின் தலைவராக பதவி வகிக்கும் இவர் தனது இரண்டு பிள்ளைகளை அதே துறையில் விரிவுரையாளராக்கியுள்ளார். 

ஜனாதிபதியின யாழ் விஜயங்களின் பொழுது அவரை வரவேற்றுப் பாடும் பாடலை படிக்கும் பொறுப்பை வகித்து வருகின்றார். 

பல்கலைக்கழகத்தை தனது சுயநலன்களுக்காக பாவிக்கும் இவர் கடந்த காலத்தில் பல்கலைக்கழகத்தை குழப்ப பல நடவடிக்கைளையும் மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(யாழ், கொழும்பு தமிழ் சி.என்.என் இன் விசேட செய்தியாளர்கள் குழு)

பூனையுடன் கொஞ்சி விளையாடும் டொல்பின் - அழகான வீடியோ இணைப்பு

டொல்பின்கள் பூனையுடன் சேர்ந்து விளையாடுவதை நீங்கள் முன்பு பார்த்து இருக்கின்றீர்களா? இவ்வீடியோ காட்சியை பாருங்கள். 

Tuesday, 12 April 2011

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்! மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தல்!!

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் படியும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் ஐ.நாவை வலியுறுத்தியுள்ளன. 

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்கள் குழு கையளித்துள்ள அறிக்கையைப் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் போருக்கு இரையானவர்களை ஐ.நா மறந்துவிடக்கூடாது. இரண்டு ஆண்டுகளாக கற்சுவர்களால் இலங்கை அரசு மறைத்து வைத்திருந்த உண்மைகளை ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை வெளிப்படுத்தும். 

இந்த அறிக்கை வெளிப்படுத்தப்பட்டால் இலங்கையில் நீதியை முன்னோக்கி நகர்த்த உதவியாக அமையும் என பிரட் அடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமும் போராளிகளும் மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் போன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர். 

போர்க்குற்ற மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஐ.நா நிபுணர்கள் குழுவுடன் மகிந்த ராஜபக்ஷ ஒத்துழைத்திருக்க வேண்டும். 

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மீறல்களை விசாரிக்க எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. 

அதேவேளை, அனைத்துலக மன்னிப்புச் சபையும் இந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஐ.நாவை வலியுறுத்தியுள்ளது. 

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கையைச் சேர்ந்தவர்கள் பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும். கடந்த வரலாற்றின் மோசமான காலத்தை கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட அறிக்கையை அவர்கள் முழுமையாக வாசிக்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய, பசுபிக் பணிப்பாளர் சாம் சரிபி தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழுவின் பணி, இலங்கையில் பொறுப்புக் கூறும் நடவடிக்கைகளுக்கான ஒரு தொடக்கமாகவே இருக்க வேண்டும். மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் முயற்சிகளுக்கு இது முடிவாக இருந்து விடக்கூடாது. 

நீண்ட காலப் போரில் மீறல்களுக்கான தண்டனை விதிவிலக்காகவே இருந்தது. நாட்டின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாக அமையும். நிபுணர்கள் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துவதுடன் ஒரு சுதந்திரமான அனைத்துலக பொறுப்புக்கூறும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். 

இதன் மூலம் அனைத்துலக சட்டங்களுக்கு மாறாக நடக்கின்ற மனிதஉரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் போக்கு அனைத்துலக ரீதியாக உருவாகியுள்ளது என்ற பலமான செய்தியை ஐ.நா கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகமும் அனைத்துலக மன்னிப்புச்சபையும் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.