Premium WordPress Themes

Tuesday, 12 April 2011

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்! மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தல்!!

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் படியும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் ஐ.நாவை வலியுறுத்தியுள்ளன. 

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்கள் குழு கையளித்துள்ள அறிக்கையைப் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் போருக்கு இரையானவர்களை ஐ.நா மறந்துவிடக்கூடாது. இரண்டு ஆண்டுகளாக கற்சுவர்களால் இலங்கை அரசு மறைத்து வைத்திருந்த உண்மைகளை ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை வெளிப்படுத்தும். 

இந்த அறிக்கை வெளிப்படுத்தப்பட்டால் இலங்கையில் நீதியை முன்னோக்கி நகர்த்த உதவியாக அமையும் என பிரட் அடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமும் போராளிகளும் மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் போன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர். 

போர்க்குற்ற மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஐ.நா நிபுணர்கள் குழுவுடன் மகிந்த ராஜபக்ஷ ஒத்துழைத்திருக்க வேண்டும். 

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மீறல்களை விசாரிக்க எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. 

அதேவேளை, அனைத்துலக மன்னிப்புச் சபையும் இந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஐ.நாவை வலியுறுத்தியுள்ளது. 

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கையைச் சேர்ந்தவர்கள் பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும். கடந்த வரலாற்றின் மோசமான காலத்தை கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட அறிக்கையை அவர்கள் முழுமையாக வாசிக்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய, பசுபிக் பணிப்பாளர் சாம் சரிபி தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழுவின் பணி, இலங்கையில் பொறுப்புக் கூறும் நடவடிக்கைகளுக்கான ஒரு தொடக்கமாகவே இருக்க வேண்டும். மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் முயற்சிகளுக்கு இது முடிவாக இருந்து விடக்கூடாது. 

நீண்ட காலப் போரில் மீறல்களுக்கான தண்டனை விதிவிலக்காகவே இருந்தது. நாட்டின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாக அமையும். நிபுணர்கள் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துவதுடன் ஒரு சுதந்திரமான அனைத்துலக பொறுப்புக்கூறும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். 

இதன் மூலம் அனைத்துலக சட்டங்களுக்கு மாறாக நடக்கின்ற மனிதஉரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் போக்கு அனைத்துலக ரீதியாக உருவாகியுள்ளது என்ற பலமான செய்தியை ஐ.நா கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகமும் அனைத்துலக மன்னிப்புச்சபையும் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment