Premium WordPress Themes

Friday, 15 April 2011

ரகசியமாக கசிந்துள்ள ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நிபுணர் குழுவின் அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத நிலையில் இந்த அறிக்கை இலங்கையில் உள்ள ஊடகம் ஒன்றின் வாயிலாக கசிந்துள்ளது. 

இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. 

இந்த அறிக்கையில், அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் முயற்சிகளை நிராகரித்துள்ளது. 

தமிழீழ விடுதலைப்புலிகளும் அரச தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அரசு நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை பணயக் கைதிகள் போன்று தடுத்து வைத்திருந்ததாகவும் தப்பிச் செல்ல முயன்றவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. 

அரசாங்கம் மனிதாபிமானப் போரை நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறினாலும் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்களை மீறும் பாரதூரமான நடவடிக்கைகளில் அரசும், விடுதலைப் புலிகளும் ஈடுபட்டுள்ளனர். 

இந்த மீறல்களில் சில போர்க்குற்றங்களாகவும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் கருதப்படத்தக்கவை. 

போரின் இறுதிக்கட்டத்தில் 2008 செப்டெம்பர் தொடக்கம் 2009 மே 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் படையினர் வன்னியில் முன்னேறிச் சென்ற போது மேற்கொண்ட பரவலான எறிகணைத் தாக்குதல்களில் ஏராளமாக பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

வெள்ளை வானில் ஆட்கள் கடத்தப்பபட்டதுடன் காணாமற்போன போன சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வன்னியில் மூன்று தாக்குதல் தவிர்ப்பு வலயங்களின் மீது அரசாங்கம் கனரக ஆயுதங்களின் மூலம் கடுமையான பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பெரும்பாலான இழப்புகளுக்கு அரசின் பீரங்கித் தாக்குதல்களே காரணம். மருத்துவமனைகளின் மீதும் அரசு பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

வன்னியில் இருந்த அனைத்து மருத்துவமனைகளும் மோட்டார் மற்றும் ஆட்டிலறி போன்ற பீரங்கிகளால் தாக்கப்பட்டுள்ளன. பல மருத்துவமனைகள் திரும்பத் திரும்பத் தாக்கப்பட்டுள்ளன. 

2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலத்தில் பத்தாயிரம் உயிர்கள் பலியாகின. இதில் போரின் இறுதி நாட்களில் அடையாளம் காணப்படாமல் பெருமளவானோர் இறந்தனர். 

போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் போராளிகள் தனியாக பிடித்துச் செல்லப்படனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட்டிருக்கக் கூடும். ஏனையோர் காணாமற் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மூடப்பட்ட முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களின் அடிப்படை சமூக பொருளாதார உரிமைகள் மீறப்பட்டன. அநாவசியமாக பலர் உயிரிழக்க நேரிட்டது. பலர் சித்திரவதை செய்யப்பட்டனர். 

விடுதலைப்புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்கு வசதிகள் மறுக்கப்பட்டன. அவர்கள் வெளியுலகுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தடுக்கப்பட்டனர். முன்னேறி வந்த அரச படையினரைத் தடுக்க பொதுமக்களை புலிகள் மனித கவசங்களாகப் பயன்படுத்தினர். 

கட்டாய ஆட்சேர்ப்பை நடைமுறைபடுத்தினர். இளவயது சிறார்களையும் படையில் சேர்த்தனர். 2009 பெப்ரவரியில் தமது பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

அதிகளவு பொதுமக்கள் தங்கியிருந்த அவர்களுக்கான விநியோகப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் இருந்து பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டனர். போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியே தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். 

ஐ.நா நிபுணர் குழு இலங்கை அரசு மீது ஐந்து விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. 

1. பரந்தளவிலான பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களைப் படுகொலை செய்தமை. 

2. மனிதாபிமான இலக்குகள், மருத்துவமனைகள் மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது. 

3. பொதுமக்களுக்கு மனிதமாபிமான உதவிகள் கிடைப்பதை தடுத்தமை. 

4. போரில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிச் சந்தேகநபர்களின் மனிதஉரிமைகளை மீறியது. 

5. ஊடகங்கள் மற்றும் அரசை விமர்சிப்பவர்கள் மீதும், போர் நடைபெற்ற பகுதிகளுக்கு வெளியே மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டது. 

இதேவேளை விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆறு குற்றச்சாட்டுகளையும் நிபுணர்கள் குழு முன்வைக்கிறது. 

1. பொதுமக்களை மனிதகவசங்களாக பயன்படுத்தியது. 

2. தமது பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற பொதுமக்களைக் கொன்றது. 

3. பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து படைக்கருவிகளை இயக்கியது. 

4. சிறுவர்களைக் கட்டாயமாக படைகளில் சேர்த்தது. 

5. பொதுமக்களிடம் கட்டாயமாக வேலைவாங்கியது. 

6. போர் நடைபெறாத பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களைக் கொன்றது. 


இலங்கையில் அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதற்கு பொறுப்புக் கூறுவது உள்நாட்டு அனைத்துலக சட்டங்களின் படியான கடமையாகும். 

இந்த வலுவான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமான விசாரணை நடத்தி அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இராணுவத் தளபதிகள், மூத்த அரச அதிகாரிகள், குறிபாக இராணுவ, குடியியல், மற்றும் புலிகளின் தலைவர்கள் மீது அனைத்துலக குற்றங்களில் ஈடுபட்டதற்காக முன்னிறுத்தப்பட வேண்டும். அரசு நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு அனைத்துலக தரத்துக்கு அமைவானதல்ல. 

அதில் ஆழமான குறைபாடுகள் உள்ளன. போரின் இறுதிநாட்களில் ஐ.நாவின் அரசியல் அங்கங்களோ அல்லது அமைப்புகளோ வன்னியில் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியுள்ளன.

பரிந்துரை -1 
அ. ஆயுதப்போரின் போது இருதரப்பினாலும் மீறப்பட்ட அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான நீதியான விசாரணைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். 

ஆ. இலங்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலhளர் உடனடியாக சுதந்திரமான அனைத்துலக பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


பரிந்துரை - 2 

கீழ் குறிப்பிடும் விடயங்கள் குறித்து இலங்கை அரசு குறுகிய காலநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 


பரிந்துரை - 3
 

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் வகையிலான நீண்டகால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 


பரிந்துரை - 4 

இலங்கை தொடர்பாக 2009 இல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அழைப்பது குறித்து ஐ.நா மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தோனேசிய முன்னாள் சட்டமா அதிபர் மர்சூகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழுவின் அறிக்கை 196 பக்கங்களை உள்ளடக்கியதாகும்.

0 comments:

Post a Comment