இலங்கையில் மீள்குடியேற்றப் பகுதிகளாகிய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இம்முறையும் சித்திரைப் புத்தாண்டு சோபிக்கவில்லையென அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் சிங்களப் புதுவருடமாகிய சித்திரைத் திருநாள் தென்னிலங்கையிலும் வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் களைகட்டியிருந்த போதிலும், மீள்குடியேற்றப் பகுதிகளில் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை.
மீள்குடியேற்ற பகுதிகளில் இன்னும் இயல்பு நிலைமை நிலைமை ஏற்படாதிருப்பதனையே இது காட்டுவதாக அங்குள்ள மக்களின் கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
உறவுகள், உடைமைகள் அனைத்தையும் இழந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்திருந்து பின்னர் சொந்த இடங்களுக்கு வெறும் கைகளுடன் திரும்பியுள்ள மக்கள் தமது வாழ்க்கையை இன்னும் வழமைக்கு கொண்டுவர முடியாமல் திண்டாடுவதாக பலரும் கூறுகின்றனர்.
மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகின்றது. ஆயினும் மீள்குடியேற்றப் பகுதிகளில் பல்வேறு அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருப்பதாக மீள்குடியேறியிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆயினும் மீள்குடியேற்றப்படுபவர்களுக்கான உட்கட்டமைப்புக்கள், பொது வசதிகள் என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
அத்துடன் குறித்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களை மீளக்குடியமர்த்தும் பணி பூர்த்தியடைந்து விட்டதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்து வருகின்ற போதிலும் மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னமும் நிறைவு செய்யப்படவில்லை என்பது மக்களின் அங்கலாய்ப்பிலிருந்து புலனாகின்றது என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.










0 comments:
Post a Comment