கடந்த 29-04-2011 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(த.தே.கூ)ற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் 5ஆம் கட்டப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.இரா.சம்பந்தன், திரு.சுரேஸ்பிறேமச்சந்திரன், திரு.எம்.எ.சுமந்திரன், ஆகியோரும் சட்டதரணி கனகேஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது.
மேற்படி பேச்சுவார்த்தையில் தம்முடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாகத் த.தே.கூட்டமைப்பினரால், ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செய்தி 30-04-2011 திகதி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
ஸ்ரீலங்காவில் அதிகாரப் பகிர்வுப் பாதையூடான தீர்வு என்பது, தமிழர்கள் தமக்;குள்ள சுயநிர்ணய உரிமையையும், தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற நிலைப்பாட்டையும் கைவிட்டு, பெரும்பான்மையினர் தமது வசதிற்கேற்ப, சிறுபான்மையினருக்கு அதிகாரப்பகிர்வு ஊடாக வழங்கும் தீர்;வைப் (சலுகைகளை) பெற்று தமிழினத்தை நிரந்தரமான இரண்டாந்தரப் பிரசைகளாக மாற்றுகின்ற அரசியல் தற்கொலைச் செயற்பாடாகும்.
தந்தை செல்வா காலத்தில் தோல்வியடைந்த தந்திரோபாயங்கள்
1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒன்றின் மூலம் தமிழ்த் தேசத்தின் இறைமையை மீள நிறுவிக்கொள்ளுதல் என்ற தீhமானத்திற்கு தந்தை செல்வா தலைமையில் தமிழ் அரசியல் தலைமைகள் வந்தனர். இத்தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னரான முப்பது ஆண்டுகளில் இலங்கை அரசுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை அங்கீகரிக்கும் வகையில் இலங்கை அரசின் அரசியல் அமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவருவதன் மூலம் அதிகாரப்பகிர்வு என்ற பாதை ஊடாக இனப்பிரச்சினைக்கு சமஸ்டித் தீர்வுகாண்பதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய அதிகாரப் பகிர்வுப்பாதை மூலமான தீர்வு முயற்சிகளாகவே பண்டா செல்வா உடன்படிக்கை, டட்லி செல்வா உடன்படிக்கை போன்ற அரசியல் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதே போன்று 1970 ம் ஆண்டு தேர்தலின் பின்னர் இலங்கைக்கான புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் அதிகாரப் பகிர்வு ஊடாக இலங்கை அரசை மாற்றியமைத்து ஓர் சமஸ்டி ஆட்சி முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரேரணையை தந்தை செல்வா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்வைத்தது. அந்தப் பிரேரணை உடனடியாகப் பெரும்பான்மைச் சிங்களவர்களால் நிராகரிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் தமிழர் தரப்புக் கோரிக்கைக்கு நேரெதிராக இலங்கை அரசு ஓர் ஒற்றையாட்சி அரசு என உத்தியோகபூர்வமாக அரசியலமைப்பினூடாக நிலைநாட்டப்பட்டது.
இத்தகைய அனுபவங்கள் காரணமாகவே தந்தை செல்வாவும் ஏனைய தமிழ்த் தலைவர்களும்; ஒரு தீர்க்கமான மாற்று முடிவுக்கு வரவேண்டியிருந்தது.
ஸ்ரீலங்காப் பாராளுமன்றத்தினுள் விவாதங்களை நடாத்தியும், இலங்கை அரசுடன் நேரடிப் பேச்சுக்களில் ஈடுபட்டதன் மூலமும் இனப்பிரச்சினைக்கு பல்வேறு வழிமுறைகளுடாகத் தீர்வு காணமுற்பட்ட அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் இலங்கை அரசியலமைப்பின் வரையறைக்குட்பட்ட அதிகாரப் பகிர்வுப் பாதையூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வந்தன.
இதன் விளைவாக அனைத்துத் தமிழ்த் தலைவர்களும் இணைந்து 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மேற்கொண்டனர். அதற்கு 1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் மக்களாணை வழங்கப்பட்டது. இந்த அடிப்படையிலேயே கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ் மக்களது உரிமைகளைப் பெறுவதற்கான பயணம் நடைபெற்றது.
தோல்வியடைந்த தீர்வுப் பாதைக்கு மீண்டும் திரும்ப முயலும் கூட்டமைப்பின் தலைமைகள் இந்நிலையில் தந்தை செல்வா தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒருபோதும் உதவாது என்று தீர்மானித்து, 35 வருடங்களுக்கு முன்னர் கைவிட்ட அதிகாரப் பகிர்வுப்பாதை ஊடான தீர்வு என்ற வழிமுறையை மீண்டும் கையாள கூட்டமைப்பின் தலைமை முயல்கின்றது.
தீர்வு தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் தற்போதய உண்மையான நிலைப்பாடு
2009 மே மாதத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைமைகள், தமது நலன்களைப் பேணும் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி வெளிப்படையாகவே செயற்படத் தொடங்கினர். இதன் ஓர் அங்கமாக இந்தியாவில் தமது இருப்பினைத் தக்கவைப்பதற்காக தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை மற்றும் இணைந்த வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கைவிட்டு, இந்தியாவை திருப்திப்படுத்தும் வகையிலான அதிகாரப்பகிர்வுப் பாதை ஊடான தீர்வுத்திட்டத்தை த.தே.கூ வின் தலைமை 2009 மே 18 ற்கு முன்னரே மிக இரகசியமாகத் தயாரித்து மக்களுக்கு காட்டாமல் மறைத்து வைத்துள்ளனர். இந்த இரகசியமான நடவடிக்கை பற்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 28-02-2010 அன்று வெளியிட்ட ஊடக அறிக்கை மூலம் மக்களுக்கு அம்பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலேயே தற்போது தீர்வுக்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைக் கைவிட த.தே.கூ தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?
இறுதியுத்தத்தில் சந்தித்த பேரவலங்கள் மற்றும் போர்முடிவடைந்த பின்னரும் தொடரும் அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடைச் சட்டம் என்பவற்றினால் மரணபயத்தில் மக்கள் உறைய வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமது கடந்தகால அவலங்களைப் பற்றிய சிந்தனையில் இருந்து விடுபட முடியாமலும், எதிர்காலம் பற்றிச் சிந்திக்க முடியாமலும் உள்ளனர். மேலும் அரசியல் விடயங்களில் கருத்துக் கூறினால் கொல்லப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தோடு வாழ்கின்றனர்.
முள்ளிவாய்க்கால்ப் பேரவலத்திற்குப் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெருமளவான தமிழ் மக்கள், தேர்தலில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஒதுங்கியிருந்தனர். பெருமளவான தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்த இந்தச் சூழலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட த.தே.கூ தலைமைகள் தனித்துவமான இறைமை கொண்டதேசம் என்ற நிலைப்பாட்டையும், தமிழர்களது சுயநிர்ணய உரிமையையும் நிராகரிக்கும் அதிகாரப் பகிர்வுப் பாதையில்ச் சென்று
தீர்வுபற்றிப் பேசிவருகின்றனர். இவ்வாறு செயற்படுவதற்கு இவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?
பிற சக்திகளின் நலன்களுக்காக, தமிழர் நலன்களை பாதிக்கும் வகையில் சர்வதேசச் சூழலை தவறாகக் கையாளும் கூட்டமைப்புத் தலைமைகள்
ஐ.நா நிபுணர்குழுவின் போர்க்குற்ற அறிக்கை அடிப்படையில், ஐ.நா அமைப்பின் கண்காணிப்பில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நடாத்தப்படல் வேண்டுமெனவும், தமிழர்களுக்கு அரசியல்த் தீர்;வு வழங்கப்படல் வேண்டுமெனவும் சர்வதேச சமூகம் ஸ்ரீலங்கா அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகித்துவருகின்றது.
ஸ்ரீலங்கா அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் சர்வதேச சமூகம், ஐ.நா அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டதான தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை அடிப்படையாகவைத்தே அழுத்தங்களை பிரயோகிக்கின்றது. இந்தக் காரணங்களுக்காக அழுத்தங்களைப் பிரயோகித்தலும், சர்வதேச சமூகம் தமது நலன்களுக்கு முக்கியத்தும் கொடுக்க விரும்பும் என்பதனை தமிழர் தரப்பு புரிந்து கொள்ளவேண்டும்.
இச்சந்தர்ப்பத்தில் தமிழர் தரப்பு, தமிழர்களது நலன்களை முன்னிலைப்படுத்தி தீர்க்கதரிசனமான தீர்மானங்களை எடுக்கத்தவறினால், மீண்டும் தமிழர்கள் பலிக்கடாக்களாக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே இன்றய சர்வதேச அரசியல் சூழலில்; அடிப்படைக் கொள்கைகளைக் கைவிடாது தமிழர்களது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை என்ற நிலைப்பாடுகளை உறுதியாக வலியுறுத்த வேண்டும்.
இலங்கைத்தீவில் தமிழ்த் தேசத்தின் இருப்பு அழிக்கப்படுவதை தடுப்பதற்கான ஒரே ஒரு வழி தமிழ்த் தேசத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பன அங்கீகரிக்கப்படுவது மட்டுமேயாகும். எனவே தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் பேச்சுக்கள் இடம்பெற்று ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் அரசியல்த்தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதியாக வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்படாத நிலையில், அதிகாரப்பகிர்வு மூலமான தீர்;வை தமிழர் தரப்பு ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தமிழ்த் தேசம் அழிக்கப்படுவதனை யாராலும் தடுக்கவே முடியாது. இந்த யதார்த்தம் நன்றாகத் தெரிந்திருந்தும் த.தே.கூ வின் இந்தத் தலைமைகள், அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டு வெறும் சலுகை அடிப்படையிலான தீர்வினை எழுதிக்கொள்வதற்கு ஸ்ரீலங்கா அரசுக்குச் சந்தர்ப்பத்தினை வழங்குவதன் நோக்கம் என்ன?
போர்க்குற்ற விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்கொள்ள ஸ்ரீலங்கா அரசு பல வழிகளைக் கையாண்டுவருகின்றது. அதில் ஒரு வழிமுறையாக இன அழிப்புக்கு உள்ளாகக்ப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக த.தே.கூ வினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டு, அவர்களுக்கு(த.தே.கூ) சில சலுகைகளை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளதாக காட்டிக்கொள்ள ஸ்ரீலங்கா அரசு முற்படுகின்றது.
இதற்குத் துணை புரியும் த.தே.கூ வின் இந்தத் தலைவர்களது நடவடிக்கையானது போர்க்குற்ற விசாரணை நெருக்கடியில் இருந்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றும் நோக்கம் கொண்டதேயன்றி தமிழ் மக்களின் நலன்களின்பாற்பட்டதல்ல என்பதனையும், தமிழ் மக்களை மீளமுடியாத இக்கட்டில் மாட்டிவிடும் முயற்சி என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இதேபோன்று 2009 இல் யுத்தம் உக்கிரமாக இடம்பெற்ற காலகட்டத்தில் வன்னியில் இருந்தும், உலகம் முழுவதும் வாழ்ந்த தமிழ் மக்களிடமிருந்தும் யுத்த நிறுத்தக் கோரிக்கை
வலுப்பெற்றிருந்த நேரத்தில், அந்தக் கோரிக்கைகளை பலவீனப்படுத்தும் வகையிலேயே கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகள் அமைந்திருந்ததுடன், முள்ளிவாய்க்காலில் பேரவலம் நடந்தேறத் துணை நின்றது என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இவ்வாறு பிறசக்திகளின் நலன்களுக்காக, தமிழ் தேசத்தின் நலன்களைக் கைவிட்டு த.தே.கூ தலைமைகளால் மேற்கொள்ளப்படும் தமிழின விரோத செயற்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி









0 comments:
Post a Comment