Premium WordPress Themes

Friday, 29 April 2011

தமிழ் அமைச்சர்களுக்கு யாழ் மைந்தனின் பகிரங்க மடல்!

வடக்கின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே கிழக்கின் அமைச்சர் கருணா அம்மான் அவர்களே உங்கள் இருவருக்கும் எனது அன்பான வேண்டுகோள்! 

போராட்ட காலத்தில் தமிழினத்துக்கு துரோகம் செய்தீர்கள் அதனால் முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை சிறிலங்கா அரசாங்கம் வேண்டுமேன்றே திட்டமிட்டு குண்டுகள் வீசி கொலையும் செய்தனர். 

தாயின் முன்பு தனையனும் தங்கையின் முன்பு அக்காவும் அம்மாவின் முன்பு அப்பாவும் கொலை செய்யப்பட்ட கொடுரத்தைக் கண்ட வன்னி மண் அந்த கொடுமைகளை எண்ணி இன்றும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் போது அந்த கண்ணீருக்கே காரணமாவர்களை நீங்கள் காப்பாற்ற நினைப்பது இழந்த எம் உறவுகளுக்கு நீங்கள் மீண்டும் செய்யும் மகா துரோகமே. 

வடகிழக்கு தாயகத்தில் கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் எம்மினம் உலகில் எவ்வினமும் சந்திக்காத துன்பங்களை எதிர்கொண்டது. இன்று எத்தனை பெண்கள் விதவைகளாக எத்தனை குழந்தைகள் அநாதைகளாக வாழ்கிறார்கள். 

எமதினத்தின் வருங்காலமே இந்த அரசால் கேள்விக் குறியாக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்தின் அட்டகாசம் இன்றாவது உலகால் உணரப்பட்டு எமதினத்துக்கு ஏதோ விடிவு கிடைக்கும் நிலைமை உருவாகுகையில் அதனை நீங்கள் குழப்பும் வகையில் உங்களின் நலனுக்காக செயற்படுவது நல்லதா? உங்களின் மனட்சாட்சியை தொட்டுக் கேளுங்கள். 

உங்களுக்கு விடுதலைப்புலிகளை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் செய்து கொண்டு சிங்கள அரசுக்கு வால் பிடிப்பதுதான் கவலையாக இருக்கிறது. 

அரசாங்கம் செய்த கொடுரங்களை மறுக்கும் வகையிலும் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டதையும் மூடி மறைக்கவும் கொழும்பில் நடக்கவிருக்கும் மே தினக் கூட்டத்துக்கு பொது மக்களை திரட்ட அரசு முயற்சிக்கிறது.

அவர்கள் சிங்கள மக்களை அழைக்கலாம் ஆட்சேபனை இல்லை. ஆனால் வடக்கு கிழக்கு மக்களையும் எதிர் பார்ப்பது அரசின் முட்டாள் தனம்.

அதற்கு தாளம் போட்டுக் கொண்டு நீங்கள் இங்கிருக்கும் எதுவுமறியாத அப்பாவி பொதுமக்கள் சிலரை பொய் சொல்லி அழைக்க முற்பட்டுக் கொண்டிருப்பதாக அறிகிறோம். நீங்கள் என்ன திருகுதாளம் என்றாளும் செய்யுங்கள் ஆனால் ஆண்டவன் இருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம். 

நீங்கள் அமைச்சுப் பதவிகளை எடுத்துக் கொண்டு சுகபோக வாழ்க்கை வாழலாம். உல்லாசம் செய்யலாம். ஏன் அரசின் காலில் விழலாம். அல்லது அவர்களை பல்லக்கில் சுமக்கலாம். நாங்கள் உங்களை கோபிகக்கவுமில்லை உதவி செய்யுங்கள் என்று உங்களை கேட்கவுமில்லை ஆனால் உபத்திரம் செய்யாமல் இருங்கள்.

தெய்வம் நின்று கொல்லும் என்ற காலம் மலை ஏறிவிட்டது தெய்வம் அன்றக்கே கொல்லும் காலம்தான் இது. 

அரசு கொத்துக் கொத்தாய் குண்டு வீசி எம் உறவுகளை கொன்று குவித்தபோது நாங்களும் எத்தனை நாடுகளை கெஞ்சியிருப்போம். அப்போது யாரும் பாரா முகமாய் இருந்த போது குதுகுலமாய் இருந்த மகிந்தர் இன்று அதே குற்றத்தில் இருந்து தப்புவதற்காக அதே நாடுகளின் கால்களில் விழுந்து திரிகிறார். 

அது மட்டுமா எம்மினத்தின் குருதியை குடித்த குற்றத்துக்காக சரத்பொன்சேகா அநாதரவாய் கூண்டில் வாடுகிறார். 

நீங்கள் உங்களின் சொந்த இனத்துக்கு செய்த துரோகத்துக்கும் பாவத்துக்கும் பிரயாசித்தம் பெறவேண்டுமானால் இனியாவது சிந்தித்து செயற்படுங்கள். 

அரசாங்கம் செய்த பாவத்துக்கு அண்டவன் தண்டனை கொடுக்க இருக்கும் காலத்தில் குறுக்கே விழுந்து ஏன் மண்கவ்வப் போகின்றீர்கள்?

இனியும் உங்கள் துரோகத்தனம் தொடர்ந்தால் தமிழினம் தரணியில் இனி மன்னிக்காது. உலகமே கண்ணீர் விட முள்ளிவாய்க்காலில் ஒன்றுமறியாத பொதுமக்களின் உயிர் கொத்துக்கொத்தாய் இழந்ததை நீங்கள் நியாயப்படுத்த முனைவதை நிச்சயம் வரலாறு மன்னிக்காது. 

விலை மதிக்க முடியாத உயிர்களுக்கும் தியாகங்களுக்கும் நிச்சயம் நியாயமான பதில் கிடைக்கும் காலம் நெருங்கிவிட்டது. 

தயவு செய்து எனது இந்த மடலை உங்களின் ஊடகத்தில் பிரசுரிக்கவும்.

நன்றி

யாழ் மைந்தன்.

0 comments:

Post a Comment