கோடிக்கணக்கான மக்களால் வாழும் கடவுள் என்று நம்பிக்கையோடு வணங்கப்பட்ட புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபா நேற்று காலை 7.40 மணிக்கு முக்தி அடைந்தார். அவரது மறைவு குறித்து தகவல் வெளியானதும் நாடெங்கும் உள்ள பக்தர்கள் கண்ணீர் விட்டனர்.
அவரது படத்துக்கு மாலை அணிவித்து பஜனைப் பாடல்களை பாடி வருகிறார்கள். ஸ்ரீசத்ய சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான வி.வி. ஐ.பி.க்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்திக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
சுமார் 5 லட்சம் பக்தர்கள் புட்டபர்த்திக்கு வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப எல்லாவித ஏற்பாடுகளையும் ஆந்திர மாநில அரசு அதிகாரிகளும், சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செய்துள்ளனர்.
பக்தர்கள் அஞ்சலி செலுத்தி, தரிசிக்க வசதியாக சாய்பாபாவின் உடல் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் அரங்கில் நேற்று மாலை 6 மணிக்கு வைக்கப்பட்டது. இன்றும், நாளையும் (திங்கள், செவ்வாய்) இருநாட்களுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக சாய்பாபா உடல் அங்கு வைக்கப்பட்டு இருக்கும் பொதுமக்கள் இன்று காலை நீண்ட வரிசையில் வந்து சாய்பாபா உடலை தரிசித்து சென்றனர்.

சாய்பாபாவுக்கு சுமார் 170 நாடுகளில் கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். வெளிநாட்டு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி செல்ல பிரத்யேக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில அரசு 4 நாள் துக்கமும், கர்நாடக அரசு 2 நாள் துக்கமும் அறிவித்துள்ளன. புட்டபர்த்தி ஊர் மக்கள் நேற்று காலை முதலே சோகத்தில் உள்ளனர். சுற்றுப்பகுதி கிராம மக்கள் புட்டபர்த்திக்கு திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பெரும்பாலான பக்தர்கள் அவரது உபதேசங்களை கூறியபடி வணங்கி சென்றனர். சாய்பாபா உடலுக்கு பொதுமக்கள் நாளை மாலை வரை அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கும். புதன்கிழமை காலை சாய்பாபா உடல் அடக்கம் செய்யப்படும்.
புட்டபர்த்தியில் உள்ள அவரது யஜுர் மந்திர் இல்லம் அருகில் உடல் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் அடக்கம் நேரம் பிறகு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
புட்டபர்த்திக்கு இன்று காலை பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் புட்டபர்த்தியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. புட்டபர்த்தியில் உள்ள எல்லா கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரம் போலீசார் புட்டபர்த்தி நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.









0 comments:
Post a Comment