Premium WordPress Themes

Saturday, 14 May 2011

முதல்வராக ஜெயலலிதா நாளை காலை பதவி ஏற்பு : அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடக்கிறது


மின் வெட்டு, ஊழல், கட்டப் பஞ்சாயத்து, கட்சியில் ஒரு குடும்ப ஆதிக்கத்தால் நடந்த குளறுபடிகள் என, கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த சிக்கல்களுக்கு விடிவு ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் 146 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, அ.தி.மு.க., தனிப் பெரும்பான்மை பெற்றதையடுத்து, இக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, நாளை காலை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில் நடக்கும் பதவியேற்பு விழாவில், கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஜெயலலிதாவுடன், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா முதல்வராவது இது மூன்றாவது முறை.தமிழக சட்டசபைக்கு, கடந்த ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடந்தது. ஒரு மாதத்திற்குப் பின், நேற்று முன்தினம் நடந்த ஓட்டு எண்ணிக்கையில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, 203 இடங்களில் வெற்றி பெற்று பெரும் சாதனை படைத்தது. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., 146 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மை பெற்றது. தே.மு.தி.க., 29 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.மேலும், மனிதநேய மக்கள் கட்சி இரண்டு இடங்களிலும், புதிய தமிழகம் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. தலா ஒரு இடங்களில் போட்டியிட்ட பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவையும் வெற்றி பெற்றன.

தி.மு.க., தலைமையிலான ஆளுங்கட்சி கூட்டணி, வெறும் 31 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று, மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தி.மு.க., 23 தொகுதிகளிலும், 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 30 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., மூன்று தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. கூட்டணியில் இடம் பெற்றிருந்த மற்ற கட்சிகள், காணாமல் போயின.

தேர்தலில், தனிப் பெரும் கட்சியாக 146 தொகுதிகளில் அ.தி.மு.க., இமாலய வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று காலை 9:30 மணிக்கு, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது. அதில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒன்று சேர்ந்து ஏகமனதாக, சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதாவை தேர்வு செய்கின்றனர்.அதன் பின், எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்துடன், இன்று மாலை ராஜ்பவனில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவை, ஜெயலலிதா சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு, சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில் நடக்கும் விழாவில், ஜெயலலிதா மூன்றாவது முறை தமிழக முதல்வராக பதவியேற்கிறார். இவருக்கு, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் நேற்றே துவங்கி, மும்முரமாக நடந்து வருகின்றன. ஜெ., பதவியேற்பு விழாவில், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். பதவி ஏற்பு விழாவில், ஜெயலலிதாவுடன் 26 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பர் என தெரிகிறது

0 comments:

Post a Comment