போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழக முதல்வராக நாளை மறுநாள் பதவியேற்கவிருக்கும் செல்வி ஜெயலலிதா ஜெயராம் சூளுரை விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றியடைந்து எதிர்வரும் 15 ம் திகதி தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இரண்டு தீர்வுகளை முன்வைத்துள்ளார்.
போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன் இலங்கை மீதான பொருளாதார தடையினை விதிக்க இந்திய மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜெயா தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை விளக்கியுள்ளேன். இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. எனவே தமிழக அரசால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயற்பட முடியும். அதற்கு மேல் செயற்படுவதானால் அது மத்திய அரசால் மட்டுமே, அதாவது இந்திய அரசால் மட்டுமே செயற்பட முடியும்.
இருப்பினும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நான் இரண்டு தீர்வுகளை முன்வைக்க விரும்புகின்றேன். போர்க்குற்றம் புரிந்ததாகத் தெரிவிக்கப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச போர்க்குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதை செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்.
இரண்டாவதாக, இலங்கைத் தமிழர்கள் கௌரவமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும். அதைச் செய்ய இலங்கை ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் மறுத்தால், இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்.
அப்படிச் செய்தால், இலங்கை அரசு பணிவதைத் தவிர வேறு வழியில்லை. இதைச் செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்´ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.









0 comments:
Post a Comment