மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்க மறுத்து வரும் சிறிலங்கா அரசு அதற்குப் பதிலாக 10ஆயிரம் தமிழ் காவலர்களை வேண்டுமானாலும் நியமிக்கத் தயார் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கூறியுள்ளது.
இந்தத் தகவலை சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசதரப்புக்கும் இடையிலான பேச்சுக்களுக்கான இணைப்புச் செயலராகவும் பணியாற்றுபவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அரச ஊட்கங்களுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்தப் பேச்சுக்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
“சிறிலங்கா அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற ஐந்து சுற்றுப் பேச்சுக்களிலும், ஒற்றையாட்சியை அடிப்படையாக வைத்தே கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை இரு தரப்பினருக்குமிடையில் கருத்து மோதல்களை தோற்றுவிக்கக் கூடிய எந்தப் பிரச்சினைகளும் எழவில்லை.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை அடிப்படையாக வைத்தே, இந்தப் பேச்சுக்கள் நடைபெற்றன.
இதில் காவல்துறை மற்றும் காணி அதிகாரத்தைத் தவிர மற்றைய அதிகாரங்களை வழங்குவதற்கு அரசதரப்பு கொள்கையளவில் இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
காவல்துறை அதிகாரத்தை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு தயங்கும் அரசதரப்பு, உடனடியாக 700 தமிழ் காவலர்களை நியமிக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.
தேவைப்படின் 10,000 தமிழ் காவலர்களை நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் அரசதரப்பினரால் கூறப்பட்டுள்ளது.
13வது திருத்தத்தில் உள்ள காணி அதிகாரங்கள் மற்றும் அதிகாரப்பகிர்வு செயற்பாடுகளுக்கும் கூடியவரையில் இணக்கப்பாட்டை தெரிவிக்க அரசாங்கம் தயாராகவுள்ளது.
அதிகாரப்பகிர்வின் ஒரு நகர்வாக மேலவை (செனட்சபை) ஒன்றை அமைப்பதற்கும் அரசாங்கத் தரப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இது தொடர்பான ஆழமான கருத்துக்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
எனினும், மேலவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்குக் கூடுதலாக சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் வகிப்பார்கள்.
இந்திய அரசின் ஆதரவைப் பெற்றுள்ள 13வது திருத்தச்சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் இப்போது இருப்பதைவிட மாகாணசபைகளுக்கு ஆகக் கூடிய அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்க்கிறார்கள். எனவே, அடுத்து சில நாட்களில் நடைபெறவுள்ள ஆறாவது சுற்றுப்பேச்சு வெற்றியளிக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கத் தரப்பு நடத்தும் பேச்சுக்கள் முடிந்த பின்னர், ஏனைய சிறிய அரசியல் கட்சிகளுடன் இதுபற்றிய பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கும்.
முஸ்லிம் கட்சிகளுடனும் இது தொடர்பாக நாம் பேச்சுக்களை நடத்துவோம்.
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றி பதவிக்கு வரும் போது, அவர்களும் மாகாணசபைகளின் அதிகாரங்கள் என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதனை ஆதரிக்க ஆரம்பிப்பார்கள்.“ என்றும் சஜின் வாஸ் குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.









0 comments:
Post a Comment