சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ள ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையால் எழுந்துள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சிறிலங்கா அரசுக்கு இந்தியாவின் ஆதரவு முக்கியமானது. பொருத்தமான நேரத்தில் அந்த ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
இன்று காலை அலரி மாளிகையில் உள்ளூர் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச,
“பொய்யான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஐ.நாவின் அறிக்கையையோ அதன் உள்ளடக்கத்தையோ சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை.
ஆனாலும் ஒரு அரசாங்கம் என்ற வகையில், நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அவப்பழியை துடைக்க இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நாவுக்குப் பதில் ஒன்றை அனுப்பவுள்ளோம்.
இந்த அறிக்கையை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. தீவிரமாகவே எடுத்துக் கொண்டுள்ளது.
ஐ.நா பொதுச்செயலருக்கு அனுப்புவதற்கான பதில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானதாக இருந்தபோதும், ஒரு அரசாங்கம் என்ற வகையில் அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது. பொருத்தமான முறையில் அரசாங்கம் அதற்குப் பதிலளிக்கும்.
போரின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான எந்தவொரு புள்ளிவிபரத்தையும் வழங்கும் நிலையில் நான் இல்லை.
ஏனென்றால், போர் நடந்த போது அந்தப் பகுதியில் எவ்வளவு பொதுமக்கள் இருந்தார் என்ற சரியான புள்ளிவிபரம் ஏதும் கிடையாது.
அரசாங்கம் மேற்கொண்டது மனிதாபிமான நடவடிக்கையே. மக்களை மீட்கின்ற அந்த நடவடிக்கையின் போது பொதுமக்களைப் படையினர் இலக்கு வைக்கவில்லை.
இராணுவ நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகவே நடத்தப்பட்டன.
எமது படைகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். அவர்களுக்கு மனிதஉரிமைகள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் குறித்த அறிவு போதிக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் எப்போதும் கடைப்பிடிக்கிறார்கள்.
சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ள ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையால் எழுந்துள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சிறிலங்கா அரசுக்கு இந்தியாவின் ஆதரவு முக்கியமானது.
இந்தியா எப்போதும் சிறிலங்காவுடன் ஒத்துழைத்து உதவி வருகிறது. எமது உறவுகள் எல்லா வேளைகளிலும் நன்றாகவே உள்ளன.
ஐ.நாவின் இந்த அறிக்கை தொடர்பாக இந்தியா பொருத்தமான வேளையில், பொருத்தமான பதிலை வழங்கும்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு எதிரான விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் உண்மைநிலையை பகிரங்கப்படுத்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று தயாராகி வருகின்றது" என்று மேலும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, நிமால் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.









0 comments:
Post a Comment