Premium WordPress Themes

Tuesday, 17 May 2011

இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது குறித்து பரிசீலனை

ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு இலங்கை அரசாங்கத்துக்கு பதிலளிக்கமுடியாதவிடத்து நியூசிலாந்து உட்பட சர்வதேச சமூகம் பொருத்தமான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது பற்றி பரிசீலனை செய்யும் என்று நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முரே மக்குலி தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான நிபுணர்குழு அறிக்கையை நியூசிலாந்து அரசாங்கம் ஆதரிக்குமா என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கீத் லொகி எழுத்து மூலமாக எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கையில், வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நிபுணர்குழுவின் அறிக்கையை நியூசிலாந்து  அரசாங்கம் ஆதரிக்கின்றது என்றும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் பற்றியும் கவலை கொள்வதாகவும் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இரு தரப்பினராலும் சர்வதேச சட்டம் பாரதூரமாக மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக  ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாராதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும். அவற்றை விசாரிக்க ஐ.நா செயலாளர் நாயகம் சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும். இவை உட்பட நான்கு பயனுள்ள சிபாரிசுகளை ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை கொண்டுள்ளன. 

பதிலளிக்கும் கடப்பாடுகளுக்கான முட்டுக்கட்டைகள் பற்றியும் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளது. ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு விசாரணைகளை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்படுமிடத்து நியூசிலாந்து உட்பட சர்வதேச சமூகம் பொருத்தமான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்குவது குறித்து பரிசீலனை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஐ.நா. குழுவின் அறிக்கை குறித்து சகல தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள  வேண்டும் என்றும் இலங்கையில் உள்ள ஐ.நா. பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படியும் நியூசிலாந்து அரசாங்கம் சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றது என்றும் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்தார்

0 comments:

Post a Comment