Premium WordPress Themes

Sunday, 22 May 2011

நீதிமன்றத்தில் கனிமொழி: ராஜாத்தி கண்ணீர்


திமுக எம்.பி. கனிமொழி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரைப் பார்த்த அவரது தாயாரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியுமான ராஜாத்தி அம்மாள் கண்ணீர் விட்டு அழுதார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழி, விசாரணைக்காக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

 கனிமொழியுடன் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழி, தனது கணவர் அரவிந்தனைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு நீதிமன்ற வளாகத்தில் தன்னைச் சந்திக்க வந்திருந்த திமுகவினருக்கு வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் நீதிமன்றத்துக்கு காலை 10.15 மணிக்கு வந்தார். கனிமொழியைப் பார்த்தவுடன் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதன்பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்துகொண்டனர். இருவரும் கைகளைப் பற்றிக்கொண்டு பேசிக்கொண்டே இருந்தனர்.

கைதான வெள்ளிக்கிழமையன்று இறுக்கமாகத் தோற்றமளித்த கனிமொழி, சனிக்கிழமை நீதிமன்றத்தில் லேசான புன்முறுவலுடன் காணப்பட்டார்.

 நீதிமன்ற அறைக்குள் அவசரமாக நுழைய முற்பட்டபோது, தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் கனிமொழி பேசினார். "நான் நன்றாக இருக்கிறேன். வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்' என்று தைரியமான தொனியில்  பதிலளித்தார்.

 தனது மகன் ஆதித்தியாவை மடியில் அமரவைத்து நீண்ட நேரம் சிரித்தபடி அவர் பேசிக்கொண்டிருந்தார்.

 மூக்குத்தி மட்டும்: சிறைச்சாலை விதிகளின்படி நகைகளை அணிய அனுமதி இல்லாததால், கனிமொழி மூக்குத்தியை மட்டுமே அணிந்திருந்தார். கழுத்து, கைகளில் தங்க நகைகள் எதுவும் காணப்படவில்லை.

 சரத்குமாரின் மனைவி அழுதுகொண்டே இருந்தார். அவரை டிபி ரியாலிட்டி நிறுவன நிர்வாக இயக்குநர் ஷாகித் பல்வாவின் உறவினர்கள் தேற்றினர்.

 விசாரணை முடிந்து சிறைக்குச் செல்வதற்காக நீதிமன்ற அறையில் இருந்து வெளியே வந்த கனிமொழியிடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், "உங்களுக்காகவே மழை பெய்து, வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதுபோல இருக்கிறதே? எனக் கேட்டார். அதற்கு வானத்தைப் பார்த்து "நன்றி' எனக் கூறினார்.

மீண்டும் சிறைக்கு... மாலை 3.30 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் திகார் சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறும்போது தனது தாயாரின் கைகளைப் பிடித்தவாறு விடைபெற்றார் கனிமொழி. இதையடுத்து மாலை 3.45 மணி அளவில் ராஜாத்தி அம்மாளும் அரவிந்தனும் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

 ஜாமீன் மனு எப்போது? கனிமொழி சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த சில நாள்களில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments:

Post a Comment