Premium WordPress Themes

Tuesday, 5 April 2011

யாழ் மாநகரசபையின் இன்றைய பொதுக் கூட்டத்தில் அமளிதுமளி!

யாழ் மாநகர சபையின் இன்றைய பொதுக்கூட்டம் இன்று காலை ஆரம்பமான நேரம் முதல் பெரும் வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றதுடன் காலையில் அமர்வுகள் சில மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டன. 

இன்று காலை யாழ் மாநகரசபையின் இன்றைய அமர்வுகள் மாநகர சபை மேயர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் ஆரம்பமானது. 

யாழ். கஸ்தூரியார் வீதியில் மாநகர சபையினால் நிர்மாணிக்கப்படும் புதிய மாடிக் கட்டிடத்தின் நிர்மாணப் பணியில் பல கோடி மோசடி இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சுட்டிக் காட்டியதை அடுத்து அமர்வில் அமளிதுமளி ஏற்பட்டது. 

 



அத்தோடு எதிர்க்கட்சியினர் மாநகர சபை முதல்வருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வருவதற்கு முயற்சித்தனர். இதன் போது வாதப் பிரதிவாதங்கள் மேலும் அதிகரித்தது. 

அதனைத் தொடர்ந்து ஆளும் தரப்பினரால் நம்பிக்கைப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 



மேலும், ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் மங்கள நேஷனினால் உள்ளுர் ஊடகங்களை அமர்வுகளின் போது பிரதேச சபை பகுதிக்குள்ளே அனுமதிக்க கூடாது எனும் பிரேரணையினை முன் வைத்தார். 

இந்தப் பிரேரணையினை எதிர்த்த எதிர்கட்சியினர், ஆளும் தரப்பின் ஊழல்களை வெளிக்கொணரும் உள்ளுர் ஊடகங்களுக்கு எதிராகச் செயல்படக்கூடாது எனத் தெரிவித்ததையடுத்து சபையில் அமளிதுமளி நிலவியது. 



இதனிடையே எதிர் கட்சியினரால் வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச் சாட்டுகளுக்கும் ஆளும் தரப்பிலிருந்தோ முதல்வரிடமிருந்தோ எதுவித பதிலும் கிடைக்கவில்லை என எதிர்கட்சியினர் தெரிவிக்கின்றனர். 

காலையில் நடைபெற்ற கூட்ட அமர்வுகளில் அமளிதுமளி ஏற்பட்டதனைத் தொடர்ந்து மாநகர சபையின் முதல்வர் சபை அமர்வுகளிலிருந்து இடைநடுவே எழுந்து சென்றுவிட்டார். 

மாலைநேர அமர்வுகளில் மேயர் எதுவிதமான பதலளிப்புகளும் செய்யாமல் மௌமாக இருந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய இந்தக் கூட்டத்தொடரில் எதிர் அணித் தலைவர் மு. றெமிடியஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மரிய கொறட்டியும் கலந்து கொள்ளவில்லை. 

இதேவேளை ஈ.பி.டி.பியின் உறுப்பினர் எஸ். நிஷாந்தன், ஈ.பி.டி.பியின் ஊழல்கள் காரணமாக தனித்துச் செயல்படப் போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment