Premium WordPress Themes

Tuesday, 7 June 2011

ஈழத்தமிழருக்கு சேவைகள் செய்யத் தயங்கமாட்டேன்” பா.விஜய்

“திரைத்துறையைச் சார்ந்த கவிஞன், நடிகன் என்ற வகையில் இந்தத் துறையினூடாக ஈழத் தமிழருக்கு எவ்வாறான சேவைகள் செய்ய முடியுமோ, அதனைச் செய்யத் தயங்கமாட்டேன் என கொழும்புப் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்படும் கவியரங்கத்துக்குத் தலைமை வகிப்பதற்காக இலங்கை வந்திருக்கும் பாடலாசிரியரும் நடிகருமான பா.விஜய் தெரிவித்தார்.

கேள்வி: நீங்கள் பெற்ற தேசிய விருதைப்பற்றி ஒரு சில வார்த்தைகள்:
பதில்: தேசிய விருது என்பது இந்திய தேசத்தினுடைய பெருமிதமான ஒரு விருது. ஆட்டோகிரேப் திரைப்படத்தின் ‘ஒவ்வொரு பூக்களுமே” பாடலுக்காக இவ்விருது எனக்கு கிடைக்கப்பெற்றது.
தன்னம்பிக்கையை இளைய சமூகத்தினர் மத்தியில் விதைக்க வேண்டும் என்பதே எனது பாரிய கனவு. அதை நான் இத்திரைப்படப் பாடலின் வாயிலாக நிறைய விதைத்தேன்.
மிகப்பெரிய இளைய சமூகம் இவ்வளவு கல்வியறிவு, பொருளாதார முன்னேற்றம் உள்ள ஒரு நாட்டில் பின்னோக்கி செல்கின்றார்கள் என்பது விசித்திரமானது.
இந்த இளைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் உணர்வு எனக்கு உள்ளதுடன் எனக்கு தன்னம்பிக்கை உணர்வுகள் பற்றிய கருத்துக்கள் மீது இருந்த அபரிதம் காரணமாகவும் இப் பாடல் இயற்றப்பட்டது.
 
கேள்வி: நீங்கள் நடித்த திரைப்படமான இளைஞன் திரைப்படத்தைப்பற்றி…
 
பதில்: கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இத்திரைப்படமானது சிறிய பட்ஜெட் உடன் ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் பட்ஜெட் ரீதியிலும் கதையிலும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கதைக்களமாக மாறியது.
இத்திரைப்படத்தில் குஷ்பு, மீராஜெஸ்மின், நமீதா, வடிவேலு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கலைஞரின் வசனத்தில் உருவாகிய இத் திரைப்படத்தில் எனக்கு நடிக்கக் கிடைத்தது பெரிய பாக்கியம் என்றே கூற வேண்டும்.இவ்வாறு ஒரு பெரிய பட்ஜெட் கொண்ட திரைப்படம் மீண்டும் உருவாகும் என்பது சந்தகம்
.
கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கும் நீங்கள் கூற விரும்புவது என்ன?
 
பதில்: நான் நிறைய தமிழர்களை சந்தித்தேன். அவர்கள் அனைவர் மத்தியிலும் நிறைய கருத்துக்கள் உள்ளன அவை அனைத்தும் ஒருமித்த கருத்துக்களாக மாற வேண்டும்.
இப்போது நிலவும் அமைதி எப்போதும் நிலவ வேண்டும். இங்கு பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படாதவர்கள் என யாரும் கிடையாது. ஒவ்வொரு தமிழரும் ஏதோ ஒரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு அதிலிருந்து வெளிவந்து மீண்டும் ஒரு சகஜ வாழ்க்கையை முன்னெடுப்பது என்பது எல்லோர் மத்தியிலும் உள்ள ஒரு வினா.
வெளிநாடுகளில் உள்ள சொந்தங்கள் தமக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்விகளும் இவர்கள் மத்தியில் உண்டு.
 
இதற்கு எல்லோரும் சொல்வதைப்போல நானும் தமிழ் நாட்டில் இருந்து உதவி பெற்று தருகிறேன் என சொல்வதற்கு நான் ஒன்றும் பெரிய அரசியல்வாதியோ அல்லது அரசாங்கத்துடன் தொடர்பு இருக்கும் பெரிய சக்தியோ கிடையாது.
திரைத்துறையைச் சார்ந்த கவிஞன், நடிகன் என்ற வகையில் இந்தத் துறையினூடாக ஈழத் தமிழருக்கு எவ்வாறான சேவைகள் செய்ய முடியுமோ, அதனைச் செய்யத் தயங்கமாட்டேன்.
 
கேள்வி: நீங்கள் இலங்கைக்கு வந்ததன் காரணம் என்ன?
 
பதில்: நான் இலங்கைக்கு வந்தது இதுவே முதன் முறை என்பதுடன், கொழும்புப் பல்கலைகழகத்தின் மாணவர்கள் நடாத்தும் அழகிய கவியரங்கத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கிறேன். அத்துடன் ஈழத்தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமையவுள்ள எனது அடுத்த திரைப்படமான ‘சமர்” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான இடங்களைப் பார்வையிடவுள்ளேன்.
 
கேள்வி: வீரகேசரி இணையத்தள வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
 
பதில்: பத்திரிகைத்துறையென்றாலே பொதுவாக ஒரு பழைய பழமொழி உண்டு ஒரு பெரிய செல்வந்தன் தனது செல்வத்தை அழிக்க வேண்டும் என்றால் ஒன்று சினிமாத்துறையை தெரிவுசெய்ய வேண்டும் அல்லது பத்திரிகைத்துறையை தெரிவுசெய்ய வேண்டும்.
இப்படியான ஒரு நிலையிலிருந்து பத்திரிகைத்துறை முன்னேற்றம் கண்டுள்ளதன் காரணம் ஈழத்தமிழர்களின் வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளமையே ஆகும்.
ஈழம் போன்ற பின்தங்கிய தேசத்தில் பல போராட்டங்களுக்கு மத்தியிலும் உரிமை மறுக்கப்படும் நிலையிலும் வீரகேசரி பத்திரிகை 80 வருடங்களைப்பிடித்து பல ஆவணங்களை மக்கள் மத்தியில் கொண்டுவருகின்றது.
 
நடப்பதை நிஜமாக வெளிப்படுத்தக்கூடிய தைரியமுள்ள அலுவலர்களை உள்ளடக்கிய வீரகேசரி நூற்றாண்டு விழாவை கொண்டாட எனது வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment