Premium WordPress Themes

Saturday, 26 March 2011

ரயிலில் மோதி உடல் சிதறிப் பலியான கர்ப்பிணியின் வயிற்றிலிருந்து உயிருடன் பிறந்த அதிசயக் குழந்தை!

அதிகாலையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நிறைமாத கர்ப்பிணி, ரயில் மோதி, உடல் சிதறி இறந்தார். ஆனால், வயிறு கிழிந்து தண்டவாளத்தில் தொப்புள் கொடியுடன் விழுந்த ஆண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. 

தர்மபுரி மாவட்டம், மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலன். இவரது மனைவி குப்பம்மாள்(32); இருவரும் கட்டடத் தொழிலாளிகள். சில ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி கோவை வந்தவர்கள் சங்கனூர் ரோடு, பூந்தோட்டம் பகுதியில் குடியேறினர்.

இவர்களுக்கு ராஜதுரை(11),திருப்பதி(3) ஆகிய ஆண் குழந்தைகளும், நதியா(7), நந்தினி(5) மற்றும் ஒன்றரை வயதான தனலட்சுமி ஆகிய பெண் குழந்தைகளும் உள்ளனர். தற்போது குப்பம்மாள் நிறைமாதமாக இருந்தார். 

நேற்று அதிகாலை, 5.45 மணிக்கு, ரயில்வே தண்டவாளத்துக்கு அடுத்துள்ள புதர் பகுதியில் காலைக்கடன் கழிக்கச் சென்றவர், அங்கிருந்து திரும்பியபோது தண்டவாளத்தை கடக்க முயன்றார். 

அப்போது சென்னையில் இருந்து வேகமாக வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ், கண் இமைக்கும் நேரத்தில் குப்பம்மாள் மீது மோதி, 200 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.இதில், குப்பம்மாள் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதறியது. 

வயிற்றில் இருந்த குழந்தை மட்டும் கீழே தண்டவாளத்தின் நடுவே, உயிருடன் விழுந்தது. காலை 6.30 மணி அளவில், அப்பகுதிக்கு வந்த சிலர், தண்டவாளங்களுக்கு நடுவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டனர். 

ஓடிச் சென்று பார்த்தபோது, தொப்புள் கொடியுடன் அழகான ஆண் குழந்தை, ரத்த வெள்ளத்தில் அழுது கொண்டிருந்தது. 

சற்று தூரத்தில் இறந்த குப்பம்மாளின், சிதறிய உடல் பாகங்கள் கிடந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார், பிறந்து ஒரு மணி நேரமே ஆன ஆண் குழந்தையை, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

ரயிலில் அடிபட்டு உடல் சிதறிய கர்ப்பிணி யார் என அறிய போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர், கட்டடத் தொழிலாளி கோபாலின் மனைவி குப்பம்மாள் எனத் தெரிந்தது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

0 comments:

Post a Comment