ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறும் வகையில் செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகப்பு நிறுவனங்களை கூர்ந்து அவதானிக்கும்படி ஜேர்மனியிடம் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வேளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி கைடோ வெஸ்ரவெலுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது புலிகள் இயக்கத்தின் பல முகப்பு நிறுவனங்கள் சமுதாய நிறுவனங்கள் என்ற போர்வையில் ஜேர்மனியில் இயங்குவதாக சுட்டிக்காட்டினார்.
இந்த குழுக்கள் பிரசாரத்துக்காகவும் நிதி சேகரிப்பதற்காகவும் பல பாடசாலைகளை நடத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதென அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது பற்றி விளக்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கு தான் விரும்பிய வகையில் தேவையான காலமெடுத்து அதனை செயற்படுத்தும் உரிமை உள்ளதென கூறினார்.
பெருமளவிலானோர் கலந்துகொண்ட வெளிநாட்டு கொள்கைக்கான ஜேர்மன் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பீரிஸ், இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் காணப்பட்ட புதிய போக்குகள் பற்றி பல பிரச்சினைகளை பிரஸ்தாபித்தார். புறவயமான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார். முனித உரிமைகள் தொடர்பில் காணப்பட்ட அண்மைய தலையீடுகளில் புறவயமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டதா எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒரு நாடு கொண்டுவந்த போது அதற்கு ஆதரவு இருக்கவில்லை. இதனால், அதனை முன்னெடுக்க முடியாமல் இருந்தபோது வேறு ஒரு நாடு இந்த தீர்மானத்தை கொண்டுவந்தபோது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது எனவும் அமைச்சர் பீரிஸ் இதன்போது குறிப்பிட்டார்.










0 comments:
Post a Comment