Premium WordPress Themes

Tuesday, 12 July 2011

புலம்பெயர் தமிழர்களை அடக்க கோத்தபாய போட்ட திட்டம்


 சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் புலம்பெயர் அமைப்புகளை மடக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறார் போராளிகள் விவகாரத்தை, புலிகள் ஆதரவு புலம்பெயர் அமைப்புகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக முன்வைத்து, அவற்றின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறும் விவகாரங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைக்கு வலியுறுத்தும் இந்த அமைப்புகள் சிறார் போராளிகள் விவகாரத்தைத் தட்டிக் கழிக்க முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் கூறியுள்ளன.

விடுதலைப் புலிகளின் இராணுவத் தலைவர்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு, வெளிநாடுகளில் நிதி சேகரித்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்து அனுப்பிய வகையில் இந்த அமைப்புகள் பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

இதற்கு முன்னோடியாக கடந்த சனிக்கிழமை கொழும்பு வந்த பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்சிடம் யுனிசெவ் வெளியிட்ட அறிக்கை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் கையளித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் காணாமற்போன சிறார்கள் தொடர்பான அந்த அறிக்கையை அலரி மாளிகையில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச லியம் பொக்சிடம் கைளித்திருந்தார்.

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்தவார இறுதியில் அந்த அறிக்கை கோத்தாபய ராஜபக்சவின் கைக்குக் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

வடக்கு மாகாணசபையின் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்துடன் இணைந்து யுனிசெப் நடத்திய விசாரணைகளின் போது, காணாமற்போன பெரும்பாலான சிறார்களை விடுதலைப் புலிகளே கட்டாயமாக படைகளில் சேர்த்துக் கொண்டதாக அவர்களின் பேற்றொர் கூறியுள்ளனர்.

காணாமற்போன சிறார்கள் குறித்த 676 முறைப்பாடுகளில் 64 வீதமானவை விடுதலைப் புலிகளால் சிறார் போராளிகளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை வைத்துக் கொண்டு, பிரித்தானிய அரசாங்கத்தை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கத் தூண்டுமாறு சிறிலங்கா அரசாங்கம் லியம் பொக்சுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்பு அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தபோது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வலுவாக ஆதரித்தவர் லியம் பொக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு வந்த அவரைக் கொண்டு, சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணகளை வலியுறுத்தும் புலம்பெயர் அமைப்புகளுக்கு எதிராக பிரித்தானியாவைத் திருப்பி விடும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment