Premium WordPress Themes

Sunday, 19 June 2011

"அவன் இவன்"விமர்சனம்

பாலாவின் படம்! ஆனால் பலான, பலான படமோ...? எனும் சந்தேகத்தை கிளப்பிவிட்டிருக்கும் படம் தான் "அவன் இவன்". பின்ன என்னங்க? "பிதாமகன்" படத்தில் சிம்ரனையே ஒரு பாடல் காட்சியில் போர்த்தி கொண்டு ஆடவிட்ட பாலா, இதில் வயதான ஜமீன்தார் ஜி.எம்.குமாரை நிர்வாணமாய் ஓட செய்து, அவரை துரத்தி துரத்தி வில்லன் ஆர்.கே.வை விட்டு கொல்வதும், அம்மணமாய் தூக்கில் தொங்கவிட்டு ஊரையே வேடிக்கை பார்க்க வைப்பதும் "ஏ" ரகம் என்றால், ஹீரோக்கள் விஷாலும், ஆர்யாவும் கிராமத்து யதார்த்தம் எனும் பெயரில் பேசும் சில வசனங்களும், சில செய்கைகளும் அவர்கள் பாஷையில் சொல்வதென்றால் "பி" ரகம்!

கதைப்படி ஊர் பெரிய மனிதர், ஜமீன் தீர்த்தபதி, இத்யாதி... இத்யாதி எல்லாம் சேர்ந்தது தான். படத்தில் கேரக்டர் ஆர்‌ட்டிஸ்ட் ஜி.எம்.குமாரின் பாத்திரம்! ஓட்டு மீசையுடன் கொட்டமடிக்கும் அவருக்கு உற்ற துணையாக வாழும் பாத்திரங்கள், வால்டர் வணங்கா முடி விஷாலும், அவரது தம்பி கும்புடறேன் சாமி ஆர்யாவும். எலியும் பூனையுமாக திரியும் இந்த இருவருக்கும் திருடுவது தான் குலத்தொழில்! திருட போகவில்லையென்றால் சாமி குத்தம் என இவர்களை கொம்பு சீவிவிடும் சக்களத்தி தாய் குலங்கள் அம்பிகா -  பிரபா ரமேஷ் இருவரும்! இவர்களின் செட் பிராப்பர்ட்டி புருஷன் - அனந்த் வைத்தியநாதன்.

ஒன்றரை கண்ணும், பொம்பளை வேஷமுமாக திருட்டு தொழிலுடன் திரியும் விஷாலுக்கு, பெண் போலீஸ் ஜனனி அய்யர் மீது காதல்! ஜட்ஜ் வீட்டு லாக்கருக்கே கள்ளச்சாவி செய்து சபாஷ் வாங்கும் கும்புடறேன் சாமி (படத்தில் இதுதான் அவரது பாத்திரப்பெயர்...) ஆர்யாவுக்கு ஜமீன் ஜி.எம்.குமாரின் பரம்பரை விரோதி மகள் மதுஷாலினி மீது காதல். இவர்களையும், இவர்களது க‌ாதலையும் வைத்துக் கொண்டு படத்தை என்னமாய் காட்சி பண்ணி இருக்கிறார் பாலா!! சில பல அநாகரீக வசனங்களை தவிர்த்து பிரமாதமாய் காட்சிகள் பண்ணியிருக்கும் இயக்குநர் பாலா, கதையில் கோட்டை விட்டிருப்பதுதான் அவன் இவன் படத்தின் பலவீனம்!

வால்டர் வணங்காமுடியாக விஷால் ஒன்றரை கண் பாத்திரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அதுவும் பொம்பளை வேஷத்தில் அவர், ஆரம்ப காட்சியில் ஜி.எம்.குமாருடன் சேர்த்து ரசிகர்களையும் வசியம் பண்ணும்படி போடும் ஆட்டம் பிரமாதம். நிச்சயம் விஷாலுக்கும் விருதுகள் பல காத்திருக்கின்றன.

விஷாலாவது ஒன்றரை கண்ணுடன் கஷ்டப்பட்டு ரசிகர்களை கவருகிறார். ஆனால் அவரது தம்பியாக ஆர்யா அடிக்கும் லூட்டிகள் செம பியூட்டி! அசால்டாக சட்டி கிராப்பும், சுட்டி தனமுமாக ஒரு சில இடங்களில் விஷாலையே தூக்கி சாப்பிடுட்டு விடுகிறார் ஆர்யா!

ஜனனி அய்யர், மது ஷாலினி இருவரும் புதுமுகங்கள் என்பதையும் தாண்டி பளிச்சிட்டிருக்கின்றனர். ஜி.எம்.குமார், ஜமீன் தீர்த்தபதியாக மனதில் பதிகிறார். க்ளைமாக்ஸ்க்கு இரண்டு ரீல்களுக்கு முன்பே எண்ட்ரியாகும் ஆர்.கே., தன் கொடூர வில்லத்தனத்தால் ரசிகர்கள் மனதில் வியாபித்து விடுகிறார். டி.எஸ்.பி., கனவுடன் சப்-இன்ஸ்பெக்டர் சின்னாண்டி கேரக்டரில் புதியவர் கே.ராமராஜ் பண்ணும் கள்வர்களுக்கு கறிவிருந்து உள்ளிட்ட கலாட்டாக்களிலும், ஆர்யாவின் நண்பன் பேத்தையாக மாஸ்டர் வி.விக்னேஷ் பண்ணும் சிரிப்பு சேட்டைகளிலும் கூட இயக்குநர் பாலா தெரிவது "அவன் இவன்" படத்தின் பலம்!

விஷால் - ஆர்யா மட்டுமல்ல... "அவன் இவன்", இசையமைப்பாளர் யுவனும் தான் எனச் சொல்லும் அளவிற்கு யுவனின் பின்னணி இசை தான், படத்தின் சில காட்சிகளை போரடிக்காமல் போக செய்கிறது. பேஷ்! பேஷ்!

இசையமைப்பாளர் யுவன் மாதிரியே, ஒளிப்பதிவாளர் - ஆர்தர் ஏ.வில்சன், படத்தொகுப்பாளர் - சுரேஷ் அர்ஸ், கலை இயக்குநர் - டி.முத்துராஜ், வசனகர்த்தா - எஸ்.ராமகிருஷ்ணன் என ஏகப்பட்ட பிரம்மகர்த்தாக்கள், பிரமாண்டங்கள் இருந்தும் இயக்குநர் பாலா பல இடங்களில் படுத்தி எடுத்திருக்கிறார்.

எப்படிபார்த்தாலும் "அவன் இவன்" கொஞ்சகாலம் தியேட்டரில் போவான்! ரொம்ப காலம் தமிழ் சினிமாவில் பேசப்படுவான்!!

0 comments:

Post a Comment